• August 14, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என் கணவருக்கு 60 வயதாகிறது. வருடாந்தர ஹெல்த் செக்கப் செய்வது வழக்கம். அப்படி அவருக்கு டிரெட்மில் டெஸ்ட் செய்தபோது சந்தேகம் வந்ததால், ஆஞ்சியோ செய்தோம். அதில் 2 அடைப்புகள் இருப்பதாகச் சொல்லி ஸ்டென்ட் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், என் 20 வயது மகன் விஷயத்திலும் அக்கறை செலுத்த வேண்டியது நல்லது என்கிறார் டாக்டர். 20 வயதில் அவனுக்கு இதயத்தில் பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளதா, இப்போதே அவனுக்கும் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டுமா, இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் 

60 வயதுக் கணவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், 20 வயது மகனுக்கும் அப்படி அடைப்பு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மருத்துவர் உங்களுக்கு எச்சரித்ததை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

அதாவது ஒருவருக்கு இதயத்தில் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதால், அவரின் வாரிசுகளுக்கு சர்க்கரைநோயோ, உயர் ரத்த அழுத்தமோ இருந்து, கூடவே புகைப்பழக்கம், மதுப்பழக்கங்களும் இருந்தால், வாரிசுகளுக்கும் இதயநோய் பாதிப்பதற்கான ரிஸ்க் காரணிகள் இருக்கும் என்பதே மருத்துவர் தரப்பில் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும்.

அந்த வகையில் 20 வயதே ஆகும் உங்கள் மகனுக்கு இப்போதே அவசரப்பட்டுக் கொண்டு இதயப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

இதயநலன் காக்க

அதே சமயம், 20 வயதிலிருந்தே உங்கள் மகனுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் அவசியத்தைச் சொல்லிக் கொடுத்து, அதைப் பின்பற்ற வைக்க வேண்டியதும் இந்த நிமிடத்திலிருந்தே முக்கியத்துவம் பெறுகிறது.

இதயநலன் காக்க எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், உடற்பயிற்சியின் அவசியம், போதுமான அளவு தூக்கத்தின் முக்கியத்துவம் என ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கான விஷயங்களைக் கற்றுக்கொடுத்துப் பின்பற்றச் செய்ய வேண்டும். இள வயதிலிருந்தே இப்படிப் பழகிவிட்டால், பின்னாளில், உங்கள் கணவருக்கு ஏற்பட்டது போன்ற பாதிப்புகள் உங்கள் மகனுக்கும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *