
அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பணமோசடி தொடர்பாக மும்பை, டெல்லியில் இரண்டு நாள்கள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பெண் தொழிலதிபர் சந்தீபா விர்க் பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தன்னை hyboocare.com என்ற இணையத்தளத்தின் உரிமையாளர் என்று கூறி அதில் அழகு சாதன பொருள்களை விற்பனை செய்து வந்தார். ஆனால் உண்மையில் அவர் தெரிவித்திருந்த பொருள்கள் அவரிடம் இல்லை. இணையத்தளமும் பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. அதனை வெறுமனே பணம் சம்பாதிக்கவும், பொதுமக்களை ஏமாற்றவும் மட்டுமே சந்தீபா பயன்படுத்தி வந்ததை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டில் கண்டுபிடித்தனர்.
இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் ஃபாலோவர்ஸ்
சந்தீபா பணமோசடியில் ஈடுபட்டதாக மொகாலி போலீஸார் முதன் முதலில் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தி இருக்கிறது.
மோசடியான வழியில் பணம் சம்பாதித்து அதன் மூலம் அசையா சொத்துகளை சந்தீபா வாங்கி குவித்து இருப்பதையும் அமலாக்கப்பிரிவு விசாரணையில் கண்டுபிடித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் பாலோவர்களை கொண்ட சந்தீபாவின் கம்பெனி வாட்ஸ் ஆப் நம்பரும் செயல்பாட்டில் இல்லை.
மொத்தம் ரூ.40 கோடி அளவுக்கு சந்தீபா மோசடி செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 12-ம் தேதியே அமலாக்கப்பிரிவு சந்தீபாவை தங்களது காவலில் எடுத்துவிட்டது. அவரை வரும் வெள்ளிக்கிழமை வரை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிலையன்ஸ் கேபிட்டல் அங்கரை நடராஜனுடன் தொடர்பு?
சந்தீபாவிற்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தில் இயக்குனராக இருந்த அங்கரை நடராஜனுடன் தொடர்பு இருந்தது ரெய்டில் தெரிய வந்துள்ளது.
அமலாக்கப்பிரிவு அங்கரை நடராஜன் வீட்டிலும் ரெய்டு நடத்தியது. இதில் அங்கரை நடராஜன் சந்தீபாவிற்காக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.
2018-ம் ஆண்டு அங்கரை நடராஜனுக்கு ரிலையன்ஸ் கமர்சியல் பைனான்ஸ் நிறுவனம் ரூ.18 கோடி கொடுத்தது. ஆனால் அந்த பணம் திரும்ப வரவில்லை. அது பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதே போன்று ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனமும் அங்கரை நடராஜனுக்கு எந்த விதிகளையும் பின்பற்றாமல் ரூ.22 கோடி கடன் கொடுத்துள்ளது. இந்த பணம் எதையும் நடராஜன் திரும்ப செலுத்தவில்லை.
இதற்கிடையே சந்தீபாவுடன் தனக்கு எந்த வித தொடர்போ அல்லது பண பரிவர்த்தனையோ நடைபெறவில்லை என்று அங்கரை நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.