• August 14, 2025
  • NewsEditor
  • 0

பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்குவரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது.

பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது. ‘இத்தனை பிஸ்கட்டில் இத்தனை டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது’ என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா? ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் பதில் சொல்கிறார்.

பிஸ்கட் நல்ல ஸ்நாக்ஸா?

“இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர். பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.

* பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச்சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

* சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

பிஸ்கட் நல்ல ஸ்நாக்ஸா?

* கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

* சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

* சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.

* `லோ இன் கலோரிஸ்’ (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

டீ உடன் பிஸ்கட் சாப்பிடலாமா?

பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒருநாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் சாப்பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்’’ என்கிற கற்பகம், வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவதுதான் சிறந்த தீர்வு. அதையுமே அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *