• August 14, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

ஆனந்த விகடனின் நெடு நாளைய வாசகன் என்ற முறையில் விகடனுடனான என் நெருக்கத்தை பகிர்ந்து கொள்ள ஆசைபட்டு உரிமையுடன் எழுதும் ஒரு வாசகனின் மடல் இது

விகடன் எப்போது எனக்கு அறிமுகமாயிற்று என் நினைவு பக்கங்களை பின்னோக்கி புரட்டி பார்க்கிறேன் . கும்பகோணத்தில் சிறுவனாய் இருந்த காலத்தில் வீட்டில் பேப்பர் போடுபவர் செய்தித்தாள்களுடன் விகடனையும் கொண்டு வந்து கொடுப்பார் அப்போது அதை படிக்க எங்கள் வீட்டில் ஒரு ரகளையே நடக்கும் அந்த அளவுக்கு அதில் என்ன சுவாரசியம் இருக்கு என்று பார்க்கும் ஆவலில் ஆன் நான் படிக்க ஆரம்பித்தேன் அப்பொழுதெல்லாம் நான் ஜோக் படிப்பேன் கார்ட்டூன்  ஓவியங்கள் பார்ப்பேன். அவ்வளவே..

அதற்கு பிறகு வருடம் 1983 என்று நினைக்கிறேன் அப்பொழுது விகடனில் ஒரு தொடர்கதை வந்து கொண்டிருந்தது அதில் கதாநாயகி ஒரு கலெக்டர் அதை படிக்கும் போது எனக்கும் ஆசை உண்டாகி நானும் எதிர்காலத்தில் கலெக்டர் ஆக வேண்டும் என்று நினைத்து கொண்டேன் (ஆகவில்லை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது வேறு விஷயம்)

அதே போல் அப்பொழுதெல்லாம் விகடன் அட்டை இரு பக்கமும் படம் போட்டு வெளியாகும் (இப்போது ஒரு பக்கத்தில் தான் படம் பின் பக்கம் விளம்பரம் என்று பெரிய அளவில்  வருகிறது ) 

அதில் ஒன்று என் நினைவில் இப்போதும் இருக்கிறது துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் பற்றிய அட்டை பட கட்டுரை வெளியாகி இருந்தது.  எழுத்தாளர் சோ அவர்களும் நடிகர் சோ அவர்களும் உரையாடுவதாக வித்தியாசமான முறையில் வெளியாகி இருந்தது அந்த வார விகடன் .அட்டையில் இந்த பக்கம் விக் வைத்திருந்த சோவும் அந்தபக்கம் மொட்டையுடன் இருக்கும் சோவும் இருப்பதாக வெளியாகி இருந்தது இதை பார்த்தவுடன் எனக்கு ஒரே குழப்பம் ரெண்டு பேர் போலிருக்கு என்று நினைத்து கொண்டேன் இருந்தும் குழப்பம் தீராமல் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றேன்.

அப்போது சூரசம்ஹாரம் என்ற தொடர் விகடனில் வந்து கொண்டிருந்தது. அதில் ஓவியர் மணியன் செல்வம் அவர்களின் ஓவியங்கள் இடம் பெற்றிருந்தது. தொடர் படிக்கவல்லை என்றாலும் ஒவ்வொரு வாரமும் வரும் ஓவியங்கள் ஆர்வத்தோடு பார்ப்பேன்.

அதே போல் விகடனின் கார்டூன்கள் எனை மிகவும் கவர்ந்தவை. படுதலம் சுகுமாரன் அவர்கள் எழுதிய ஒரு நகைச்சுவை விகடனில் வெளியாகி அப்போதைய ஆட்சியாளின் கண்டனத்துக்கு ஆளாகியது .ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்கள் சிறைக்கு செல்ல நேர்ந்தது பத்திரிகை உலகமே கொந்தளிக்க வெற்றியுடன் வெளி வந்தார் ஆசிரியர் அவர்கள். நான் இந்த சம்பவம் நடைபெற்ற அந்த காலங்களில் எனக்கு ஏற்பட்ட சட்ட அரசாங்க விதிமுறைகள் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் எல்லாவற்றையும் என் வீட்டில் உள்ள பெரியவர்களை கேட்டு தெரிந்து கொண்டேன்.

அப்பொழுது விகடனில் வந்த கார்ட்டூன் ஒன்று என்னை கவர்ந்தது . ஒரு கார்ட்டூனில் விகடன் ஆசிரியர் சிறைக்குள் செல்லும் போது சிறிய உருவமாய் செல்வதாகவும் ஆட்சியாளர்கள் அவரை விட பெரிய உருவமாய் இருப்பதாகவும் இருக்கும் . அடுத்த கார்ட்டூனில் ஆசிரியர் வெளிவரும் போது உயரமாய் வருவார். ஆட்சியாளர்கள் அவரை விட சிறியவராக இருப்பார்கள்.இந்த என் மனதை விட்டு நீங்காத ஒன்று.

இந்த நிகழ்வு என்னுள் பத்திரிகை உலகின் சக்தியையும் பேனா முனைக்கு உள்ள வலிமையையும் உணர்ந்து கொள்ள வைத்தது விகடன்.

அடுத்து விகடனில் வரும் விமர்சனம். ஒரு திரைப்படத்தை பற்றிய விகடனின் பார்வை என்ன அது தரும் மதிப்பெண் என்ன என்று அறிய ஆவலாய் இருப்பேன் . உதாரணமாக விகடனின் விமர்சனம் பற்றிய ஒரு நினைவை குறிப்பிட விரும்புகிறேன்

கே.பாக்யராஜ் அவர்களின் தூறல் நின்னு போச்சு விமர்சனத்தில் வரும் வரிகள் என் நினைவில் இருக்கிறது. எப்போதும் முதல் மதிப்பெண் பெறும் மாணவன் ஒரு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும் போது ஆசிரியரின் மன நிலை எப்படி இருக்குமோ அந்த மன நிலையில் தான் இந்த படத்துக்கு மதிப்பெண் வழங்குகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த ஏழு நாட்களுக்கு அடுத்து வந்த படம்அது என்பதால் இந்த விமர்சனம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

நான் கல்லூரி முடித்து சென்னை வந்த பின் வேலைக்காக கஷ்டப்பட்ட காலங்களில் கூட நான் விகடனை வாங்குவதை நிறுத்தியதில்லை படிப்பதையும் நிறுத்தியதில்லை நான் மவுண்ட் ரோடு செல்லும் போது , விகடன் அலுவலகம் கடக்கும் போதெல்லாம் விகடன் அலுவலகத்தை ஆசையாய் பார்ப்பேன் அங்கு வாசலில் ஆனந்த விநாயகர் சன்னதி ஒன்று உள்ளது. எனது எழுத்துக்கள் அதாவது என் படைப்புகள் விகடனில் பிரசுரமாக, நீ தான் அருள் புரிய வேண்டும் என்று அப்பொழுது வேண்டி கொண்டது இன்றளவும் ஞாபகத்தில் இருக்கிறது.

2009 காலகட்டத்தில் விகடனில், வலைப்பூ என்ற வாய்ப்பு என்ற தலைப்பில் இணையதள வலைப்பூக்கள் பற்றியும் அதில் உள்ள பயன்கள் பற்றியும் வந்த விரிவான கட்டுரையை படித்தேன் (அப்பொழுது தான் நான் இணைய தள உலகில் நுழைந்திருந்த நேரம்அது ) இக் கட்டுரை படித்தவுடன் என் கவனம் இணைய தள பக்கம் முழுமையாய் திரும்பியது

நான் வலைத்தளங்கள் படிக்க ஆரம்பித்த பிறகு எனக்கும் வலைத்தளம் தொடங்கும் ஆசை வர எனது ஊரின் பெயரில் குடந்தையூர் என்ற தளம் தொடங்கினேன் எழுத ஆரம்பித்த போது எனக்கு பத்திரிகையாளனாக ஆனது போல் ஒரு சந்தோஷம் இருந்தது . இருந்தும், அது முழுமை யானது எப்போது தெரியுமா?

எனது நூறாவது பதிவு என் புகைப்படத்துடன் யூத்புல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் பிப்ரவரி மாதம் ( 24-02-2011) இடம் பெற்ற அன்று தான். எங்கள் வீட்டில் ஏதோ கிறுக்கி கொண்டிருக்கிறான் என்று நினைத்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் எனது பதிவுகள் விகடனில் வந்ததை பார்த்து விட்டு, இன்னும் நிறைய எழுது என்று ஊக்கப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் .

இன்னொரு முக்கிய நிகழ்வையும் சொல்லியாக வேண்டும். என் எழுத்துக்கு முதன் முதலில் கிடைத்த சன்மானமும் விகடனிடமிருந்து தான். நான் எழுதிய ‘குடிக்காத்து குத்தமாய்யா’ என்ற ஹாஸ்யமான கட்டுரை விகடன் இதழில் தான் வெளியானது. அதற்கு தான் 300 ரூபாய் சன்மானம் கிடைத்தது.

அதற்கு பின் இரண்டு நாவல்கள், 10 சிறுகதைகள் வரை மற்ற வார இதழ்களில் நான் எழுதியிருக்கிறேன் என்பதை இங்கே பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி.

அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்தவுடன் எனக்கு ஒரு உற்சாகம் பரவும். அது விகடன் இதழ் அன்று வெளி வந்திருக்கும் என்பதால் இப்போது அந்த உற்சாகம் வியாழக்கிழமைக்கு மாறி இருக்கிறது. காரணம் ஆனந்த விகடன் இப்போது வியாழக்கிழமை அன்று வெளி வருகிறது.

தொடரட்டும் இந்த உற்சாகம்.

-ஆர்.வி.சரவணன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *