
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தை சுற்றி 2 நாட்கள் ட்ரோன் பறக்க காவல் ஆணையர் அருண் தடைவிதித் துள்ளார். நாடு முழுவதும் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டா லின் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதையொட்டி, சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
9 ஆயிரம் போலீஸார்: மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ்குமார் (வடக்கு) மேற்பார்வையில், சுமார் 9,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.