• August 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையில், போராடுபவர்களை காவல்துறை அப்புறப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து மதியம் முதலே ரிப்பன் மாளிகையைச் சுற்றி காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

அதேவேளையில், அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு தலைமையில் கடைசி கட்டமாக போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

மாலை 4 மணிக்கு தொடங்கி 15 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என விசாரித்தோம்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அரசின் தனியார்மய முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் வாதாடிய அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ‘மக்களுக்கான தொழில் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும். சங்கம்தான் அரசை ப்ளாக்மெயில் செய்துகொண்டிருக்கிறது.’ எனப் பேசியிருந்தார்.

இதற்கு எதிராகப் போராட்டக்குழுவும் வலுவான வாதங்களை முன்னெடுத்து வைத்திருந்தது. இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.

திங்கள்கிழமையைப் போல அரசுத் தரப்பு காட்டமாக இன்று பேசவில்லை என்கின்றனர்.

‘அரசு, ஊழியர்களுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் செய்துகொடுக்கும். அவர்களுக்கான மாற்று ஏற்பாடுதான் இது.’ என அரசுத் தரப்பு ரொம்பவே பக்குவமாக வாதங்களை முன்னெடுத்து வைத்திருக்கிறது.

ஆனாலும், போராட்டக்குழு தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்கிறது. அவுட் சோர்சிங் என்பதே தவறு என தங்களின் வாதத்தை போராட்டக்குழு தரப்பில் ஆஜரானவர்கள் முன்னெடுத்து வைத்திருக்கின்றனர்.

மேலும், தாங்கள் முதல்வருக்கு எழுதிய கடிதத்தையும், முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது 2021-ல் எழுதிய கடிதத்தையும் போராட்டக்குழு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மளிகை
சென்னை மாநகராட்சி ரிப்பன் மளிகை

இந்த வழக்குக்கு முன்பாகவே காலையில் ஒரு பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்துவிட்டது.

போக்குவரத்துக்கும் மக்கள் நடப்பதற்கும் இடையூறாக இருப்பதால் போராட்டத்தைக் கலைக்க வேண்டும் என்பது மனுதாரரின் வாதம்.

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதி, ‘போராட்டத்தை இங்கிருந்து கலைத்து போலீஸ் அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட இடத்தில் நடத்த வேண்டும்.

காவல்துறை போராட்டக்காரர்களை சட்டத்திற்குட்பட்டு முறையாகக் கைது செய்ய வேண்டும்.’ எனத் தீர்ப்பு வழங்கினார்.

இதைத் தொடர்ந்துதான் மதியத்திலிருந்தே ரிப்பன் மாளிகைக்கு வெளியே காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கைது செய்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொண்டு வரப்பட்டது.

காவல்துறை உயரதிகாரிகளும் எப்படி கைது நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்கிற ஆலோசனையில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். ரிப்பன் மாளிகை பரபரப்பாக மாறத் தொடங்கியது.

இந்த சமயத்தில்தான் மதியம் 1:15 மணியளவில் அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் ரிப்பன் மாளிகைக்கு வந்தனர்.

கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு இவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு, தாங்கள் போராட்டக்குழுவுடன் பேச விரும்புவதாக மதியம் 2 மணிக்கு போராட்டக்குழுவுக்கு மெசேஜ் பாஸ் செய்தனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அந்த சமயத்தில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் நிர்வாகிகள் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிரான வழக்கில் ஆஜராகியிருந்தனர்.

`அவர்கள் வரும் வரைக்கும் நாங்கள் காத்திருக்கிறோம்’ என அமைச்சர்கள் கூறினர்.

அந்த வழக்கு விசாரணை முடிந்தவுடனேயே நிர்வாகிகளுக்கு அமைச்சர்களின் அழைப்பைப் பற்றி தகவல் சொல்லப்பட்டது. மாலை 4 மணிக்கு நிர்வாகிகள் ரிப்பன் மாளிகைக்கு வந்தனர்.

நிர்வாகிகள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக உதவி கமிஷனர் நா.கண்ணனும் அங்கு வந்து சேர்ந்தார்.

அமைச்சர்கள், போராட்டக்குழு ஆலோசனையில் அவரும் கலந்துகொண்டார். 4 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. 15 – 20 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

அமைச்சர் கே.என்.நேரு ஏன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை? இது அவருடைய துறை விவகாரம்தானே எனும் விமர்சனம் எழுந்திருந்தது.

போராட்டத்தின் முக்கியமான கட்டத்தில் கே.என்.நேரு இன்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தாலும், அவர் பெரிதாக எதையும் பேசவில்லை என்கிறார்கள்.

வழக்கம்போல சேகர்பாபுதான் பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருக்கிறார். ஆனால், வழக்கமான அசால்ட்டான உடல்மொழி அவரிடம் வெளிப்படவில்லை என்கின்றனர்.

‘நீங்கெல்லாம் உழைச்சு களைச்சு டயர்ட் ஆகியிருக்கீங்க. உங்க ஜனங்களும் பாவம். உழைச்சு அலுத்துப் போயிருக்காங்க. அவங்களுக்கு நாங்க நல்லது பண்ணி தரோம். எங்களை நம்புங்க.’ என சேகர் பாபு வழக்கத்தை விட நிதானமாகவே பேசிப் பார்த்திருக்கிறார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

‘எங்களோட கோரிக்கைகள்ல நாங்க உறுதியா இருக்குறோம். காலைல கூட முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கோம். எங்களோட சிரமங்கள் அவருக்கு புரியும்னு நம்புறோம்.

கோர்ட்டு கேஸூன்னு இல்லாம முதல்வரே தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைக்கணும்னு நினைக்கிறோம்.’ எனப் போராட்டக்குழு தரப்பினர் கூறியிருக்கிறார்கள்.

போராட்டக்குழு முதல்வருக்கு எழுதிய கடிதத்தை சேகர் பாபுவும் நேருவும் வாங்கி வரிக்கு வரி வாசித்திருக்கின்றனர்.

`எங்க அரசு உங்களுக்கு நல்லதுதான் பண்ணும் எங்களை நம்புங்க. சின்ன கீறலோ தவறோ கூட இல்லாம முடிச்சுக்கலாம்.

இங்க இருந்து கலைஞ்சு போய்டுங்க. நாளைக்கே உட்கார்ந்து பேசி ஒரு தீர்வுக்கு வருவோம். விஷயம் கோர்ட்டுக்கு போயிடுச்சு.

போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தச் சொல்லி நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருக்கு. கலைஞ்சு போகலன்னா நாங்க கைது நடவடிக்கையை நோக்கி தள்ளப்படுவோம்.

இல்லன்னா எங்க மேலதான் நீதிமன்ற அவமதிப்பா போயிடும். நீங்க நல்ல யோசிச்சு சுமுகமான முடிவு எடுங்க.’ என சேகர் பாபு பேசி முடித்திருக்கிறார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அதற்கு, `எங்களின் கோரிக்கைகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இருந்தாலும் மக்களிடம் சென்று நீங்கள் சொன்னதைச் சொல்கிறோம். அவர்களே முடிவு எடுக்கட்டும்.’ எனப் போராட்டக்குழுவினர் கூறியிருக்கின்றனர். பேச்சுவார்த்தை அத்தோடு முடிந்திருக்கிறது.

வெளியே வந்து போராட்டக்குழு அரசின் செய்தியைச் சொல்ல, மக்கள் மாநகராட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்தே போராட்டம் அப்படியே தொடருமென போராட்டக்குழு அறிவித்துவிட்டது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அமைச்சர்கள் இருவருக்குமிடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்ததாகவும் மாநகராட்சி வட்டாரத்தினர் தகவல் சொல்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து மாலை முதலே ரிப்பன் மாளிகை பில்டிங்குக்கு முன்புள்ள பெரியார் சாலையும், ராஜா முத்தையா சாலையும் முழுமையாக ப்ளாக் செய்யப்பட்டிருக்கிறது.

போராட்டக்காரர்களைக் கைது செய்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

500-க்கும் மேற்பட்ட காவலர்களும் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படலாம் எனும் சூழலே நிலவுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *