
பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப் ஆகியோர் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘வார்’ திரைப்படம், மிகப்பெரிய வெற்றிப்பெற்று, வசூலையும் குவித்தது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘வார் 2’ திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியிருக்கிறார். இதில் முதல் பாகத்தில் நடித்த ஹிருத்திக் ரோஷன் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். அவருடன் ‘ஆர்.ஆர்.ஆர்.’ மூலம் பாலிவுட் வரை பிரபலமான தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடித்துள்ளதால், ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேப் போல, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாள நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படமும் தமிழ்நாடு தாண்டி உலகம் முழுவதும் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இதற்கிடையில், இந்த இரண்டு படங்களும் நாளை (ஆகஸ்ட் 14ம் தேதி) திரைக்கு வருகின்றன.
1986-ம் ஆண்டு வெளியான பகவன்தத்தா எனும் இந்தி படத்தில் நடிகர் ரஜிகாந்துடன் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடிகர் ஹிருத்திக்ரோஷன் நடித்திருந்தார். அதை நினைவுகூர்ந்து, நடிகர் ரஜினிகாந்தின் 50-ம் ஆண்டு திரைப்பயணத்தை நிறைவு செய்வதை நடிகர் ஹிருத்திக் ரோஷன் வாழ்த்தியிருக்கிறார்.
ஹிருத்திக் ரோஷன் தன் எக்ஸ் பக்கத்தில், “ஒரு நடிகராக எனது முதல் அடிகளை உங்கள் பக்கத்திலிருந்துதான் எடுத்து வைத்தேன். ரஜினிகாந்த் நீங்கள் எனது முதல் ஆசிரியர்களில் ஒருவர். ரஜினிசார், தொடர்ந்து எங்களுக்கு நிலையான உத்வேகமாகவும் இருங்கள். 50 ஆண்டுகால திரை மேஜிக்கை நிறைவு செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…