
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள களத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம் என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகச் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளரிடம் கூறும்போது, “தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவை தந்திருக்கிறோம். அந்தக் கோரிக்கைகளில் முதலாவதாக, 01.05.2025 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பு பிரகாரம் இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும், இரண்டாவதாக, தேர்தல் ஆணையத்தின் நிறைய கையேடு புத்தகங்கள் உள்ளன, அந்த கையேடுகள் எல்லாம் தேர்தல் ஆணையத்தினுடைய இணையத்தளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் உள்ளது. அவற்றை தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளில் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் இடம்பெற்றுள்ளது.