
புதுடெல்லி: 'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பிஹாரில் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பெகல் தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பெகல், "கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். எனினும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 250 எம்பிக்கள் கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். எனினும், அவர்களை டெல்லி போலீசார் பாதி வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.