நியாயமான, நேர்மையான, சுதந்திரமான தேர்தல்கள் நடைபெறுவதில்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் தற்போது நடைபெறும் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுகின்றனவா என்றால், பெரும் கேள்விக்குறிதான். வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம்சாட்டுகிறார். அதைப் பார்த்து தேர்தல் ஆணையம் பதைபதைத்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையத்திடம் அப்படி எந்தப் பதற்றமும் இல்லை.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றிருக்கிறதா என்பதை ஆய்வுசெய்வதற்கு மாறாக, ‘உங்கள் குற்றச்சாட்டை உறுதிமொழிப் பத்திரத்துடன் கையெழுத்திட்டுக் கொடுங்கள்’ என்று தேர்தல் ஆணையம் கேட்கிறது. இது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களைக் காட்டித்தான் அவர் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.
மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் ஐந்து விதமான முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. அங்கு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் முறைகேடானவை என்கிறார் ராகுல் காந்தி. மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றார்கள். ஆனால், ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்ற பா.ஜ.க., மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றுவிட்டது.
அப்படியென்றால், ஒரு லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்து, பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அந்த மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது. போலி வாக்காளர்கள் இல்லையென்றால், பா.ஜ.க நிச்சயம் தோற்றுப்போயிருக்கும். இதுபோல, பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, தில்லுமுல்லு நடைபெற்றிருக்கிறது. அத்தகைய வெற்றியின் மூலமாகத்தான் பிரதமராக மோடி வந்திருக்கிறார் என்பது ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு.

இங்கு அடிப்படையே பிரச்னையாக இருக்கிறது. அதாவது, நம் நாட்டில் தேர்தல் ஆணையர்கள் நியமனமே சரியில்லை. மத்திய அரசின் ஆலோசனைப்படி குடியரசுத் தலைவரால் தேர்தல் ஆணையர்களும், தலைமைத் தேர்தல் ஆணையரும் நியமிக்கப்பட்டுவந்தார்கள். அந்த சூழலில், மத்திய அரசு பணியிலிருந்து முந்தைய நாள் மாலையில் ஓய்வுபெற்ற ஒருவர், மறுநாள் காலையில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அவலமெல்லாம் நிகழ்ந்தது. இப்படித் தேர்தல் ஆணையர்கள் நியமனமே பெரும் சர்ச்சைக்கு உரியதாக மாறியது.
இந்தச் சூழலில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது, “ஆணையர்கள் நியமனம் எப்படி நடைபெற வேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும். அந்த சட்டம் இயற்றப்படும்வரை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரைப்படி புதிய தேர்தல் ஆணையர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் நடைபெற வேண்டும்” என்ற ஆலோசனையை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2023-ம் ஆண்டு இந்த ஆலோசனையை வழங்கியது. அதன் ஆலோசனைப்படி சட்டம் இயற்றியிருந்தால், நேர்மையாக நியமனங்கள் நடைபெற்றிருக்கும். ஆனால், மத்திய பா.ஜ.க அரசு அதை விரும்பவில்லை. எனவே, அவசர அவசரமாக ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. பிரதமர், பிரதமரால் நியமிக்கப்படும் ஓர் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட குழு, தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கான பரிந்துரையை வழங்கும் என்று சட்டம் கொண்டுவந்தனர்.
அதாவது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை குழுவிலிருந்து நீக்கிவிட்டார்கள். புதிய சட்டத்தின்படி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மத்திய அரசின் பக்கம் இருக்கும். எனவே, மத்திய அரசு விரும்பும் நபர்களை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கும் நிலையைக் கொண்டுவந்தனர்.
இந்தப் பின்னணியில்தான், பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், அதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் போன்ற பிரச்னைகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
வாக்காளர் பட்டியல் எப்படி இதுவரை தயாரிக்கப்பட்டது என்று பார்த்தால், சட்டமன்றத்துக்கோ, மக்களவைக்கோ தேர்தல் வந்தால், வாக்காளர் பட்டியல் திருத்தப்படும். எப்படி? முந்தைய தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்துக்கொண்டு, வீடு வீடாகச் சென்று நீக்கல், சேர்த்தல் (முந்தைய வாக்காளர் பட்டியலில் இருக்கும் நபர்கள் இறந்துவிட்டாலோ, வேறு இடம் சென்றுவிட்டாலோ, அத்தகைய பெயர்கள் நீக்கப்படும். புதிதாக வாக்குப்பெறும் தகுதியுள்ளவர்களின் பெயர்கள் சேர்கக்கப்படும்) மேற்கொள்ளப்படும்.
அதன் பிறகு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தரப்படும். பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்படும். அதில் ஏதாவது ஆட்சேபணைகள் இருந்தால் (Claims and Objections), அது குறித்து அரசியல் கட்சிகளோ, பொதுமக்களோ தெரிவிக்கலாம்.
ஆட்சேபணைகள் வரும் பட்சத்தில், தேர்தல் அலுவலர்கள் நேரடியாக களத்துக்குச் சென்று ஆய்வு செய்து, ஆட்சேபணை உண்மையாக இருந்தால், அதன் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். கடைசியில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்தப் பட்டியல் பிரதி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதுதான் நடைமுறை. ஆனால், முந்தைய தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் சேர்த்தல், நீக்கல் செய்து, பட்டியலை இப்போது பீகாரில் தயாரிக்கவில்லை. வாக்குரிமை பெற்றவர்களாக தங்களைக் கருதும் அனைவரும் ஆன்லைன் மூலம் தங்கள் உரிமையைத் தெரிவிக்கலாம் என்று சொல்லப்பட்டது. அதன் அடிப்படையில், ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இங்குதான் பிரச்னை தொடங்கியது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, 11 ஆவணங்களில் ஏதாவது ஓர் ஆவணத்தைக் கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சொன்னது. அதில், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையோ, எதற்கெடுத்தாலும் கேட்கப்படும் ஆதார் அட்டையோ, அரசு வழங்கிய குடும்ப அட்டையோ இல்லை.
இதில், வேதனையான வேடிக்கை என்னவென்றால், பாட்னா போன்ற சில பகுதிகளில் ஆதாரை ஏற்றுக்கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஆதார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை; எந்தப் பிரிவினர் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க மாட்டார்களோ, அவர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலிலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில், சுமார் 20 லட்சம் பேர் பெண்கள் என்று ‘தி ஹிண்டு’வில் செய்தி வந்திருக்கிறது. புலம்பெயர்த் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஆண்கள்தான். பெண்கள் கிடையாது. எனவே, 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகவே எண்ணம் எழுந்திருக்கிறது.
பீகாரில் நீக்கப்பட்டட 65 லட்சம் பெயர் கொண்ட பட்டியலை எங்களிடம் கொடுக்கச் சொல்லுங்கள் என்று உச்ச நீதமன்றத்திடம் எதிர்க்கட்சிகள் கேட்டதற்கு, சட்டப்படி அதை நாங்கள் கொடுக்க வேண்டியதில்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது. வரைவு வாக்காளர் பட்டியலை எலெக்ட்ரானிக் வடிவத்தில் எளிதாகப் படிக்கும் வகையில் வெளியிட்ட தேர்தல் ஆணையம், 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதன் பின்னணியில், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஆட்சேபணைகள் வந்தாதாலோ என்னவோ, உடனே அதை பி.டி.எஃப் வடிவத்தில் மாற்றிவிட்டார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்பது உறுதியாகிறது.
அது மட்டுமல்ல, தேர்தல் நடத்தை விதிகளை மிக மோசமான அளவுக்கு கடந்த மக்களவைத் தேர்தலின்போது மீறியது ஆளுங்கட்சி! ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலின்போது, “உங்களிடம் இரண்டு மாடுகள் இருந்தால், அதில் ஒரு மாட்டை வெளிநாட்டிலிருந்து இங்கு சட்டவிரோதமாக வந்து உட்கார்ந்திருப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் கொடுத்துவிடுவார்கள்” என்று பிரதமர் மோடி பேசினார். இது மதரீதியான பேச்சு! இது அப்பட்டமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல்.

அதேபோல, ‘நாங்கள் 80… நீங்கள் 20’ என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சு அது. நான் தேர்தல் அதிகாரியாக இருந்திருந்தால், இப்படிப் பேசியதற்கு அவர்களிடம் விளக்கம் கேட்டிருப்பேன். அத்துடன், தேர்தல் முடியும்வரை எந்தவொரு இடத்திலும் தேர்தல் பிரசரம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பேன். அந்த அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. அதை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், பயன்படுத்தவில்லை.
மேற்கு வங்கத்தில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி பிரசாரம் செய்ய வேண்டும் என்று அனுமதி கேட்டார்கள். ஆனால், அவர்கள் அனுமதி கேட்ட அதே இடத்தில் இருந்துதான் அதே தேதியில்தான் வாக்குச்சாவடி பணியாளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான கருவிகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும். எனவே, அந்த நாளில் அந்த இடத்தில் பிரதமரின் தேர்தல் பிரசார கூட்டத்தை அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். ஒரு மாவட்ட ஆட்சியருக்கே அவ்வளவு அதிகாரம் இருக்குமென்றால், தேர்தல் ஆணையத்துக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும்? ஆனால், அதை அவர்கள் பயன்படுத்தவில்லை. எனவே, இந்த தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை போய்விட்டது.
இவ்வளவு மோசமான தேர்தல் ஆணையம், இதற்கு முன்பு எப்போதுமே இருந்ததில்லை. மேற்கு வங்கத்தில் நான் பணியாற்றிய காலத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக எஸ்.எல்.ஷக்தர் இருந்தார். 1981-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு தொடங்கியிருந்தது. அந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்றால், சி.பி.எம் தலைமையிலான இடது முன்னணிதான் வெற்றிபெறும் என்பது எல்லோரும் அறிந்திருந்த உண்மை.
அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, ‘வாக்காளர் பட்டியல் பணி முழுமையடையவில்லை. எனவே, அது சரியாகும் வரை தேர்தலை நடத்தக் கூடாது’ என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து தன்னை இணைத்துக்கொண்டது. அப்போது, “வாக்காளர் பட்டியல் முற்றுப்பெறவில்லை என்ற காரணத்தை வைத்து தேர்தலைத் தள்ளிப்போட முடியாது. ஏனென்றால், வாக்காளர் பட்டியலை முழுமைப்படுத்திய பிறகும்கூட, முழுமைபெற்ற நாளிலிருந்து தேர்தல் நடைபெறும் இடைப்பட்ட நாட்களில் சிலர் இறந்துவிடலாம், சிலர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிடலாம், சிலர் புதிதாக வாக்குரிமை பெறும் நிலைமை வரலாம். எனவே, வாக்காளர் பட்டியல் முழுமையடையவில்லை என்ற காரணத்தை வைத்து தேர்தலை தள்ளிப்போட முடியாது” என்று ஷக்தர் உறுதியாகக் கூறினார்.

வழக்கு போட்டது காங்கிரஸ் கட்சி. மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. அந்த அரசால் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர்தான் ஷக்தர். அவர்தான் காங்கிரஸ் தொடர்ந்த வழக்குக்கு எதிராக வாதாடினார். “ஜனநாயகத்தில் இருக்கும் குறைபாடுகளைச் சரிசெய்வதற்கு ஒரே வழி, ஜனநாயகத்தை இன்னும் ஆழமாக வேரூன்ற வைப்பதுதானே தவிர, ஜனநாயகத்தை மட்டுப்படுத்துவது அல்ல” என்ற வாதத்தை அவர் முன்வைத்தார்.
காங்கிரஸ் விருப்பத்துக்கு ஏற்ப தேர்தல் தள்ளிப்போடப்படவில்லை. அவர்களது வழக்கு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. உரிய காலத்தில் தேர்தல் நடைபெற்றது. சி.பி.எம் தலைமையிலான இடது முன்னணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படி நேர்மையாக தேர்தல் நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஷக்தரை காங்கிரஸ் கண்டிக்கவில்லை. அவர் தனது கடமையைச் செய்தார். ஷக்தர் எங்கே…. இவர்கள் எங்கே?
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்)