
தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். தென் மாவட்டங்களில் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பல மாணவிகள் தங்களது பட்டங்களை ஆளுநரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்த நிலையில், ஆராய்ச்சி பட்டம் பெற வந்த மாணவி ஜீன் ஜோசப் மட்டும் ஆளுநரிடம் பட்டத்தை தராமல் நேரடியாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகரிடம் வாழ்த்து பெற்று மேடையில் இருந்து இறங்கினார்.
கைகளை நீட்டிக்கொண்டிருந்த ஆளுநருக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது. இருந்த போதும் ஆளுநர் சிரித்து, அந்த மாணவியை வாழ்த்தி அனுப்பினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஜீன் ஜோசப், “ஆளுநர் தமிழ்நாட்டுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் நான் பட்டம் பெற விரும்பவில்லை. இதனால் தான் எனது பட்டத்தை துணைவேந்தரிடம் கொடுத்து வாங்கினேன்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
இது சம்பவம் குறித்து விமர்சித்திருந்த முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், “நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர தி.மு.க துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி. ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, தி.மு.க-வினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தி.மு.க-வின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். தி.மு.க-வைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் ஸ்டாலின் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.