
இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிக அளவு வெங்காயம் விளைகிறது. கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கிறது. ஆனால் அடிக்கடி வெங்காய விலை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உள்நாட்டில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தியது. இதனால் வெங்காய விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மாநில அரசு வெங்காயத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரி வந்தனர். வெங்காயத்திற்கு குறைந்த பட்சமாக ரூ.24 கொடுக்க வேண்டும் என்று விவசாய அமைப்புகள் கோரி வருகின்றன
கடந்த 2023ம் ஆண்டு வெங்காயத்தின் விலை மிகவும் மோசமாக சரிந்தது. இதையடுத்து விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.350 மானியமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அந்த மானியம் சில விவசாயிகளுக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மாநில அரசு மானியம் பெறாத வெங்காய விவசாயிகளுக்கு மானிய தொகையை அறிவித்துள்ளது. மொத்தம் 14661 விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்கப்படும். இதற்காக 28.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிக பட்சமாக நாசிக் மாவட்டத்தை விவசாயிகளுக்கு ரூ.18 கோடி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் படி ஒரு விவசாயி அதிக பட்சமாக 200 குவிண்டால் வெங்காயத்திற்கு மானியம் பெற முடியும். இப்பிரச்னை குறித்து மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். அதோடு விவசாயிகள் சங்கத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பச்சுகாடு இதற்காக உண்ணாவிரதமும் இருந்தார். தற்போது விவசாயிகள் ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.1800 முதல் 2000 வரை விலையாக பெறுகின்றனர்.