
அனைத்து மாணவ மாணவிகளையும் போல ஜீன் ராஜன் என்ற மாணவி தனது பட்டத்துடன் மேடையேறி வந்தபோது ஆளுநர் ஆர். என்.ரவி அவருடன் புகைப்படம் எடுக்க கையை நீட்டினார். ஆனால் அவரைக் கண்டுகொள்ளாத மாணவி, துணை வேந்தர் சந்திரசேகருடன் மட்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டு மேடையை விட்டு இறங்கினார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெறும் 650 மேற்பட்டோர் பட்டமளிப்பு விழா அரங்கில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
பட்டம் பெறும் மாணவ, மாணவிகளிடம் அவர்களுக்கான பட்டங்கள் கையில் கொடுக்கப்பட்டு அமர வைக்கப்பட்டிருந்தனர். பெயர்களை அழைத்தவுடன் வரிசையாகச் சென்று சிறப்பு விருந்தினரான ஆளுநரிடம் பட்டத்தைக் கொடுத்து, அவர் வழங்குவது போலப் புகைப்படம் எடுத்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்க வேண்டும்.
மேடையில் துணைவேந்தர் சந்திரசேகரும் உடனிருப்பார். வழக்கம் போல நிகழ்ச்சி சென்றுகொண்டிருந்த நிலையில், ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெறுபவர்கள் வரிசையில் ஜீன் ராஜன் என்ற மாணவியின் பெயர் அழைக்கப்பட்டது. அவர் மேடையேறிச் சென்றதும் வழக்கம்போல பட்டத்தை வாங்கி ஒப்படைப்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி கையை நீட்டினார்.
மேடைக்குச் சென்ற ஜீன் ராஜன், ஆளுநரைப் பொருட்படுத்தாமல் அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டத்தைக் கொடுத்து, ‘உங்களிடம் இருந்துதான் பட்டம் பெற விரும்புகிறேன்’ என்றார். எதையும் எதிர்பாராத அவரும் பட்டத்தை வாங்கி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். அதனால் விழா மேடையில் சற்று பரபரப்பு நிலவியது.

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி நாகர்கோவிலைச் சேர்ந்தவர். அவர் வெளியில் வந்ததும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், “ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் பட்டம் பெற விரும்பாமல் துணைவேந்தர் சந்திரசேகர் சாரிடம் பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன்” என்றார்.