
அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மாலை மேற்கொள்கிறார்.
இதையொட்டி, திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திருப்பத்தூர் மாவட்டத்தில் எழுச்சிப் பயணத்தை இன்று தொடங்குகிறேன். இன்று காலை 32 அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களின் பிரச்னை குறித்து என் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அவை நிறைவேற்றப்படும். தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. பத்திரிகை, ஊடகங்களில் தங்கம், வெள்ளி நிலவரம் வருவதைப்போல, இப்போது கொலை நிலவரத்தைப் பட்டியலிட்டுச் சொல்கின்ற அளவுக்கு மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
இதற்குக் காரணம், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிப்பதில்லை. அதனால் தான் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையைக் கண்டால் கொஞ்சம்கூட அச்சம் கொள்வதில்லை. இன்றைக்கு ரவுடிகளின் ராஜ்ஜியம், கொலை பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு மூலக்காரணமே போதைப் பொருள் புழக்கம் அதிகமாகியிருப்பது தான்.
ஸ்டாலின் தொடங்கிய திட்டம் எது நல்லதாக ஆகியிருக்கிறது. திட்டம் தொடங்கும்போது நன்றாகத் தான் இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்தி சக்சஸ் செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், இவர்கள் சுமார் 50 திட்டங்களை அறிவித்து, 50 குழு போட்டிருக்கிறார்கள். அந்த 50 குழுவும் கிடப்பில் கிடக்கிறது’’ என்றவரிடம்,
“அ.தி.மு.க-வில் இருந்து மைத்ரேயன் விலகி தி.மு.க-வில் இணைந்தது..?’’ குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். “இது எங்கள் உட்கட்சி விவகாரம். அதை நீங்கள் கேட்கக்கூடாது. வேறு எதையாவது கேளுங்கள். உட்கட்சி விவகாரம் பற்றி பகிரங்கமாக பேச முடியாது. எங்களுக்குத்தான் என்னவென்று தெரியும். அதை வெளிப்படுத்த முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் கட்டுப்பாடு இருக்கிறது. அதை வெளியில் பேசுவது சரியாக இருக்காது. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தக் கட்சிக்குப் போகக்கூடாது? அந்தக் கட்சிக்குப் போகக்கூடாது? என்று யாரும் தடுக்க முடியாது. மற்றக் கட்சிகளில் யாரும் போகவில்லையா? எல்லாமே கட்சி மாறி மாறி தான் இருக்கிறார்கள்.

அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். மீண்டும் கட்சியில் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டோம். அதே மாதிரி மைத்ரேயனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தான். மறுபடியும் சேர்த்தோம். மறுபடியும் போய்விட்டார். இப்படிப்பட்டவர்கள் எந்தக் கட்சியிலுமே நிலையாக இருக்க மாட்டார்கள். கூட்டணியைப் பொறுத்தவரை இன்னும் 8 மாதகாலம் இருக்கிறது. இன்னும் பல கட்சிகள் அதிமுக-பாஜக கூட்டணியைத் தலைமை ஏற்று வந்து சேர்வார்கள்’’ என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள், “ `விரைவில் நீங்களும், டி.டி.வி தினகரனும் ஒரே மேடையில் இணைவீர்கள்’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து?’’ என்ன என்று கேள்வி எழுப்பினர். “அவர் தானே சொன்னார். அவரையே போய் கேளுங்கள். பா.ஜ.க கூட்டணி உண்டு. ஆனால், அ.தி.மு.க தான் தலைமை தாங்குகிறது. மற்றவையெல்லாம் நாங்கள் தான் முடிவு செய்வோம். சந்தர்ப்பம், சூழ்நிலை வரும்போது அதற்கான பதிலை நாங்கள் தருவோம்’’ என்றார் எடப்பாடி பழனிசாமி.