
மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு வழக்கில் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் உயர் அலுவலர்களின் பாஸ்வேர்டை பயன்படுத்தி தனியார் கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியில் திருத்தம் செய்து ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் கடந்த ஆண்டு மாநகராட்சி கமிஷனராக இருந்த தினேஷ்குமார், மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தார்.
அந்த வழக்கு விசாரணையில் சமீபகாலமாக வேகம் காட்டிய மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேரை முதலில் கைது செய்ய இந்த மோசடி விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மேயருக்கும், முக்கியமான ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளது என்று எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த 5 மண்டலத் தலைவர்கள், வரி விதிப்புக்குழுவில் இருந்த இரு கவுன்சிலர்கள், நகரமைப்புத்துறை அமைச்சர் நேருவால் விசாரிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தாங்கள் வகித்த பதவிகளை ராஜினாமா செய்தனர்.
வரி மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தவேண்டும் என்று அதிமுக ஆர்பாட்டம் நடத்தியதோடு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. சிபிஎம் மாநரச் செயலாளரும் இந்த வரி மோசடியை முறையாக விசாரிக்க வலியுறுத்தினார். சிபிஎம் கவுன்சிலர்கள் இது குறித்து மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி எழுப்பியபோது, திமுக கவுன்சிலர்கள் சிபிஎம் கட்சியையும், எம்.பி சு.வெங்கடேசனையும் கடுமையாக விமர்சித்து பேசினர்.
இந்த நிலையில், வரி மோசடியை விசாரிக்க மதுரை சரக டிஐஜி அபினவ்குமாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அவர் தலைமையிலான டீம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் திமுகவைச் சேர்ந்த வரி விதிப்புக் குழுத்தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

கண்ணன் காவல்துறை விசாரணையில் ‘மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், இன்னும் சில திமுக, அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இந்த வரி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பல கோடி ரூபாய் அளவுக்கு வரி விதிப்பில் மோசடி செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்ததாக சொல்லபட்டது.
‘வழக்கை திசை திருப்ப அதிமுக கவுனசிலர்கள் மீது திமுகவினரால் பொய்யாக குற்றம் சாட்டப்படுகிறது, திமுகவுக்கு ஆதரவான விசாரணை அதிகாரிகளை மாற்றி இந்த வழக்கை முறையாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று செல்லூர் ராஜூ தலைமையில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்கள் கடந்த 11 ஆம் தேதி மதுரை சரக டிஐஜி-யிடம் புகார் அளிததனர்.
இந்த நிலையில்தான் ஏற்கெனவே திமுகவிலிருந்து நீக்கப்பட்ட, மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தை சென்னையில் வைத்து கைது செய்துள்ளது காவல்துறை. அவர் விசாரணைக்காக மதுரை கொண்டு வரப்படுகிறார். இந்த தகவல் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரி மோசடி வழக்கில் இதுவரை கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், முன்னாள் உதவி கமிஷனர் ரங்கராஜன், ஏற்கெனவே மதுரையில் பணியாற்றி தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி கமிஷனராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த மோசடி வழக்கில் இன்னும் சில திமுக கவுன்சிலர்களும், அதிமுக கவுன்சிலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்ற தகவல் வந்து கொண்டிருப்பதால் மதுரையே பரபரத்துக் கொண்டிருக்கிறது.