
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறினார். இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் இடங்களில் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு 15 லட்சம் வீடுகளில் அரை அடி முதல் ஒரு அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த ஆண்டு அதைவிட அதிக எண்ணிக்கையில் சிலைகள் வைக்கப்படும்.
சென்னையில் மட்டும் 5,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. திருப்பூர் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் இடங்களில் சிலைகள் வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். திருப்பூரில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை கஸ்தூரி, கோவையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இயக்குநர்கள் பேரரசு, மோகன்குமார், நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.