
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டை முன்னிட்டு, இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடான ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார்.
இந்து தமிழ் திசை பதிப்பகம் சார்பில் பெரியார், ராஜாஜி, அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் குறித்து சிறப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘அறவாழ்வின் அடையாளம்’ என்ற நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்து தமிழ் திசை நாளிதழின் ஆசிரியர் வி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் நூலின் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி, இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் பொறுப்பாசிரியர் வி.தேவதாசன், தலைமை நிருபர் கி.கணேஷ், விற்பனை மேலாளர் எஸ்.இன்பராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.