• August 12, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியரால் தமிழகத்தைச் சேர்நத கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம், கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சுற்றுலாவிற்கு பெயர்போன புதுச்சேரி மாநிலம், தற்போது ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையால் கலாசார சீரழிவு மற்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது.

இச்செயல் பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் முகம்சுளிக்க வைக்கிறது. சுற்றுலாவை வளர்த்தெடுக்கிறோம் என்ற பெயரில் புதுச்சேரி முழுக்க புற்றீசல் போல ரெஸ்டோ பார்களை திறந்து விட்டிருக்கிறது அரசு. ஆனால் அவற்றை முறைப்படுத்தவோ கண்காணிக்கவோ பொதுமக்களுக்கு பாதிப்பு வராமல் நிபந்தனைகள் விதிக்கவோ அரசு தவறிவிட்டது.

கொலை நடந்த ரெஸ்டோ பப்

இதுபற்றி ஓரிரு ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் அரசுக்கு கண்டனங்கள் தெரிவித்தும், எங்களைப் போன்றவர்கள் சட்டமன்றத்தில்  எதிரொலித்தும் இந்த அரசும், காவல்துறையும் இதை கண்டுகொள்ளவில்லை.

காரணம் அரசு நிர்வாகம் ரங்கசாமியிடமும், காவல் நிர்வாகம் பா.ஜ.க அமைச்சர் நமச்சிவாயம் வசமும் இருப்பதால் அவர்களின் அரசியல் மோதல் இந்த அலட்சியப் போக்கை உருவாக்கி இருக்கிறது.

கொலை நடந்த ரெஸ்டோ பாரை மட்டும் மூடாமல், கூடுதலாக 12 ரெஸ்டோ பார்களை மூட உத்தரவிட்டதுடன், பார்களில் லஞ்சம் வாங்கும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் இவை அனைத்தும் அமைச்சருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும், மெத்தனமாக இருந்தது தெரிய வந்திருக்கிறது.

இது கண்டிக்கத்தக்கது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் இவர்களின் எதிர்காலமே இதனால் சிதைந்து வருகிறது. இந்த ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுப்பதைத்தான் நம் முதல்வர், சட்டமன்றத்திலும், அரசு விழாக்களிலும், பொது மேடைகளிலும் தன்னுடைய சாதனையாகக் கூறி வருகிறார்.

ரெஸ்டோ பார்களில் மது வகைகள் மட்டுமின்றி அரை நிர்வாண நடனங்களும், கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பழக்கமும் நுழைக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரியின் இந்த கலாசார சீரழிவு, அவசர நிலை பிரகடனத்திற்கு முன்பு புழக்கத்தில் விபசார விடுதிகளின் தாக்கத்தை நினைவூட்டுகிறது.

இதுதான் இந்த அரசு புதுச்சேரி மக்களுக்கு செய்திருக்கின்ற சாதனையா ?  ரெஸ்டோ பார் அனுமதி பெறுபவர்கள் உள்ளூர்காரர்கள். நடத்துபவர்கள் வெளி மாநிலத்தவர்களாக இருக்கிறார்கள்.

முதல்வர் ரங்கசாமியுடன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

 ஒவ்வொரு பாரிலும் பவுண்சர்கள் என்று கூறும் ரவுடிகள வைத்து சுற்றுலாப் பயணிகளை அடக்கி ஆள்வதின் உச்சம்தான் இந்த கொலை. பிறமாநிலத்தவர்கள் புதுச்சேரியை கொலைகார பூமி என்று எண்ணும் நிலைக்கு இந்த அரசு தள்ளிவிட்டது.

ரெஸ்டோ பாரில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று கலால் துறை நிர்ணயித்து இருக்கின்ற அத்துனை தகுதிகளும் உள்ளனவா என்றும் நேரத்தோடு மூடப்படுகிறதா என்றும் முறையாக கண்காணிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த பகுதியில் இருக்கின்ற கலால் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கொலைக்கு முழுமையான பொறுப்பை கலால் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வரும், காவல் துறையை வைத்துள்ள உள்துறை அமைச்சர் ஆகிய இருவருமே பொறுப்பு என்று நான் குற்றம் சுமத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *