நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் அரவங்காடு பகுதியில் மாதம் 8 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் பல ஊர்களில் இருந்து பொதுமக்களும் வருகின்றனர்.
அந்த ஒரு நாள் நடக்கும் சந்தையில் குறைந்த விலையில் தரமான பல பொருள்கள் கிடைக்கும் காரணத்தால் பல ஊரில் இருந்து மக்கள் இச்சந்தைக்கு வருகை தர ஆர்வம் காட்டுகின்றனர்.
புகழ்பெற்ற இந்தச் சந்தை எதற்காக ஒரு நாள் மட்டும் நடக்கிறது ? குறிப்பாக 8 ஆம் தேதி மட்டும் ஏன் நடக்கிறது ? எந்தெந்த ஊரில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்? சந்தையின் நிறை குறைகள் என்ன என்று அங்கிருக்கும் வியாபாரிகளிடம் இருந்து தெரிந்து கொள்வோம் !
8 ஆம் தேதி மட்டும் வியாபாரிகள் வருவதற்கான காரணம் “எஸ்டேட் விடுமுறை ” மற்றும் வெடி மருந்து தொழிற்சாலையின் “சம்பள நாள்.”
ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பயிற்சி பெற வரும் ராணுவப் படை வீரர்கள் மற்றும் வெடி மருந்து தொழிற்சாலைக்கு பணிபுரிய வரும் தொழிலாளர்களுக்கு 7 ஆம் தேதி சம்பளம் நாள் மற்றும் மறுநாள் 8 ஆம் தேதி விடுமுறை என்பதால், இச்சந்தை 8 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் நடைபெறுகிறது.
பல பகுதிகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு பல மாவட்டங்களில் இருந்து குறிப்பாக கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல் என பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பொருள்களை விற்பதற்காக வருகின்றனர். மாதம் ஒரு நாள் மட்டும் நடக்கும் இச்சந்தை ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்கள் மட்டும் அதிக வியாபாரம் ஆகும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
பயிற்சி பெற வரும் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி முடியும் காலம் என்பதால் ஊர் திரும்பும் முன் 8-ம் தேதி அன்று, ஏற்றுமதி தரத்திலான பொருட்களை குறைந்த விலையில் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
பல வியாபாரிகள் சின்ன சின்ன அடிப்படை தேவைகளை கோரிக்கையாக வைத்தனர். குடிநீர் வசதி, கழிவறை வசதி, தெருவிளக்குகள் என அங்கு வந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், பல ஊர்களில் இருந்து பொதுமக்களும் வருவதால், இந்தச் சின்ன சின்ன தேவைகளைப் பூர்த்தி செய்தால், சிரமமின்றி வியாபாரம் செய்ய ஏதுவாக இருக்கும் என்கின்றனர்.
ஒரு நாள் நடக்கும் சந்தையாக இருந்தாலும், அங்கிருக்கும் பொருள்கள் தரமானதாகவும் விலை குறைவாகவும் உள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.