• August 12, 2025
  • NewsEditor
  • 0

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-150 கிராம மக்கள் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இந்த காய்கறி சந்தைக்குத்தான் வருகிறார்கள். இதனால் எப்பொழுதும் பரபரப்புடன் இருக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக ஆண்டிபட்டியில் புதிய வாரச் சந்தை 2023 ஆம் ஆண்டு 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 16 கட்டடங்கள் கட்டி முடிக்கபட்டது. கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கட்டடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், இந்த இடம் தற்போது மது பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. வியாபாரிகளோ தெருக்களில் தார்பாய், தகரம் உள்ளிட்டவை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

தெருவில் கடை அமைத்திருக்கும் வியாபாரிகள்

எல்லா நேரங்களிலும் மது குடிப்பதற்காக இங்கு பலர் வந்து செல்கின்றனர் இது பற்றி அங்கிருந்த வியாபாரிகளிடம் பேசும் போது, “நாங்க நாற்பது வருசமா இங்கதா வியாபாரம் செய்கிறோம். இந்த கட்டடம் 2023ல கட்டி முடிக்கப்பட்டு அப்போதே பயன்பாட்டிற்கு வரவேண்டியது. ஆனால் இன்னும் ஏன் உபயோகத்திற்கு வரவில்லை. இதனால் தற்போது தெருக்களில் கடைகளை நடத்தி வருகிறோம். அந்த கட்டடத்தின் அருகில் எப்போது திறக்கப்படும் என்ற போர்டு இருந்தது. தற்போது அந்த போர்டையும் காணவில்லை. மது அருந்துபவர்கள்தான் அங்கு இருக்கிறார்கள்” என்றனர்.

ஆண்டிபட்டி காய்கறி வாரச் சந்தை கட்டடங்கள்

இது குறித்து ஆண்டிபட்டி கவுன்சிலர் ஆறுமுகத்தை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, “வேலை காரணமாக வெளியில் இருக்கிறேன். நாளை நான் உங்களை தொடர்புகொண்டு எப்பொழுது எங்கு சந்திக்கலாம் என்ற விவரத்தை கூறுகிறேன்” என்றார். பின்னர் இரண்டு நாட்கள் ஆகியும் தொடர்பு கொள்ளாததால் மீண்டும் ஒருமுறை முயற்சித்ததில் அழைப்பை துண்டித்துவிட்டார்.

இது குறித்து ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்ட போது, “கேண்டின் கட்டும் வேலைகள் இருப்பதால் இன்னமும் திறக்கமால் இருக்கிறோம். கூடிய விரைவில் பணிகள் முடிந்து திறக்கப்படும். தற்போது எல்லா இடங்களிலும் மது குடிக்கத்தான் செய்கிறார்கள். புதிய கட்டடத்தில் மது குடிப்பதை தடுப்பது சிரமம் தான்” என்றார்.

அதிகாரிகளே அலட்சியமாக நடந்து கொண்டால் அந்த புதிய கட்டடங்களில் இன்னும் பல சமூக விரோத செயல்கள் நடக்கும். அரசு இதை கவனிக்குமா?!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *