
நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தேவர் சோலை சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக புலி நடமாட்டம் இருப்பதை மக்கள் பார்த்து வருகின்றனர்.
தேயிலைத் தோட்டங்களில் உலவும் அந்தப் புலி தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. 10-ற்கும் அதிகமான கால்நடைகளை வேட்டையாடிய அந்தப் புலியைப் பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்களை பொருத்திக் கண்காணித்து வருகின்றனர். மேலும் புலியை உயிருடன் பிடிக்கும் முயற்சியாக 5 இடங்களில் கூண்டுகளை அமைத்துள்ளனர். வனத்துறையின் களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், புலியின் நடமாட்டத்தைக் கண்டறிய இரண்டு கும்கி யானைகளை தற்போது களத்தில் இறக்கியுள்ளனர்
இது குறித்துத் தெரிவித்துள்ள வனத்துறையினர், “தேவர் சோலை, பாடந்துறை, சர்க்கார் மூலை போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதத்தில் புலி ஒன்று 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய நிகழ்வு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் புலியை அடையாளம் காணவும் உடல்நலம் குறித்து அறியவும் அதிநவீன தானியங்கி சென்ஸார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வன ஊழியர்கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சிறப்புப் படை வரவழைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத பகுதியில் குறிப்பிட்ட அந்தப் புலி தென்படும் பட்சத்தில் யானை மீது அமர்ந்து துப்பாக்கி மூலம் கால்நடை மருத்துவர்கள் புலிக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக முதுமலையிலிருந்து வசீம், விஜய் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அச்சப்படத் தேவையில்லை” என்றனர்.