
இந்திய பயணிகளுக்கு சுற்றுலா செல்ல மலிவான வெளிநாட்டு இடங்களாக தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா மற்றும் இந்தோனேசியா ஆகியவைக் கருதப்படுகின்றன. சமீபத்திய அறிக்கைகளின்படி, லாவோஸ் மிகவும் மலிவான பயண இடமாக உருவெடுத்துள்ளது.
லாவோஸ் மலிவு விலையில் முதலிடம்
டைம் அவுட் இதழின் சமீபத்திய அறிக்கையின்படி, தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் மலிவான பயண இடமாக லாவோஸ் இருக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு £12 (சுமார் ரூ.1,414) இருந்தால் போதும். அதிலேயே தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.
டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் அமைப்பின் உலகளாவிய தரவரிசையில், 2025ஆம் ஆண்டில் உலகின் மிக மலிவான பயண இடமாக லாவோஸ் இடம்பெற்றுள்ளது.
லாவோஸ் ஏன் மலிவானது?
லாவோஸில் பயணச் செலவுகள் மிகவும் குறைவாக உள்ளன. லுவாங் பிரபாங் மற்றும் வியன்டியன் போன்ற பிரபல சுற்றுலா இடங்களின் விடுதியில் தங்க ஒரு இரவுக்கு £3 (ரூ.353) முதலே கிடைக்கின்றன. வாங் வியாங்கில் இன்னும் மலிவாக £1.50 (ரூ.176) செலவில் தங்கலாம். உள்ளூர் உணவுகள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.
பேருந்துகள் மற்றும் மினி வேன்கள் மூலம் முக்கிய நகரங்களுக்கு செல்லும் உள்ளூர் போக்குவரத்து £4.50 (ரூ.529) க்கும் குறைவாகவே உள்ளது. ஒரு நாளைக்கு மோட்டார் பைக் வாடகை £4.70 (ரூ.553) கிடைக்கிறது.
பிரபல சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுக் கட்டணங்களும் மலிவான விலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
லாவோஸ், பரபரப்பான சுற்றுலா மையங்களுக்கு மாறாக அமைதியான இடமாக திகழ்கிறது. இதன் இயற்கை அழகு, ஆறுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் நகரத்தின் கலாசார அனுபவங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
வியட்நாம் மற்றும் கம்போடியாவில் ஒரு நாளைக்கு £15 (ரூ.1,768), மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் £19 (ரூ.2,239), தாய்லாந்தில் £24 (ரூ.2,829) செலவாகும் நிலையில், லாவோஸ் £12 என்ற மலிவு விலையில் முதலிடம் பெறுகிறது.