• August 12, 2025
  • NewsEditor
  • 0

“தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாக பொறுப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீட்டிற்கான கொள்கையை அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரவேண்டும்” என்று மதுரையில் நடந்த பெண்கள் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர் மகாலட்சுமி

‘நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு சாதித்த தலித் பெண்கள் பேசுகிறார்கள்’ என்ற தலைப்பில் எவிடென்ஸ் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ஒவ்வொரு பெண் ஆளுமையின் வார்த்தைகளும் வந்திருந்த பெண்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது.

மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் வந்த பெண்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். எவிடென்ஸ் கதிர் இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்து உரையாற்ற, தமிழ்நாடு பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ். குமரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

ஏ.எஸ்.குமரி

நிகழ்வை தொடங்கி வைத்து ஏ.எஸ். குமரி பேசும்போது, “கிராம மக்கள் தங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள தற்போது தைரியமாக வெளியே வருகிறார்கள். மகளிர் ஆணையத்திற்கு புகார் அனுப்புகிறார்கள்.

பெண்களை பாதுகாக்க, அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 38 மாவட்டங்களில் கலெக்டர், எஸ்.பி-க்களுடன் கூட்டம் நடத்தியுள்ளோம். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கல்வி, பொருளாதாரத்தில் பெண்கள் தன்னிறைவு அடைந்தால்தான் அதிகாரம் கிடைக்கும்.

பாதிக்கப்படும் பெண்களை ஆற்றுப்படுத்தவும், இழப்பீடு கிடைக்கவும் செய்கிறோம். பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைக்கவும், விரைந்து தண்டனை கிடைக்க செய்யும் வகையில் மாதம்தோறும் போலீஸ் உயரதிகாரிகளுடன் முதல்வர் கூட்டம் நடத்துகிறார்.

பெண்கள், குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர், வன்முறையில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தால்தான் குற்றம் புரிபவர்களுக்கு அச்சம் இருக்கும். வீட்டை நிர்வகிக்கும் பெண்களால் நாட்டையும் நிர்வகிக்க முடியும்” என்றார்.

பங்கேற்றவர்கள்

“வன்கொடுமைகளை எதிர்கொண்டு சாதித்த பெண்கள்” என்ற தலைப்பில் நடந்த அமர்வில் ‘சங்கர் சமூக நீதி அறக்கட்டளை’ நிறுவனர் கௌசல்யா, பொதுப்பணித்துறை அலுவலர் அருள்மொழி, பொறியியல் மாணவி ரேகா ஆகியோரும்,

“தான் சார்ந்த துறையின் சவால்களை எதிர்கொண்டு சாதித்தவர்கள்” என்ற தலைப்பில் நடந்த அமர்வில் ‘தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய’ உறுப்பினர் ரேகா அழகர்சாமி, பள்ளி ஆசிரியர் மகாலெட்சுமி, தமிழ்நாடு டென்னிஸ் அசோசியசன் செய்தி தொடர்பாளர் ஆனந்தி ஜெயராமன் ஆகியோர்,

“சாதித்ததை சாதனை பயணமாக தொடர்பவர்கள்” என்ற தலைப்பில் நடந்த அமர்வில் ‘தமிழ்நாடு கிராம வங்கி’ கிளை மேலாளர் பூர்ணிமா, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் யாழினி, தனியார் ஹெல்த் கேர் நிறுவன அலுவலர் ஜெயா ஆகியோர் தாங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு ஆலோசனைகளையும் வழஙகினார்கள்.

இந்த கருத்தரங்கத்தின் இறுதியில் எதிர்கால திட்டமிடல் குறித்தும், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாக பொறுப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும், தலித் பெண்களின் நில உரிமையை உறுதிப்படுத்துதல், கிராமம் மற்றும் நகர்ப்புற பஞ்சாயத்துகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு,

கருத்தரங்கு

தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் செயல்திட்டங்கள், சாதியம், ஆணாதிக்கம், வறுமை போன்ற பல நிலைகளில் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளான தலித் பெண்களுக்கு மன நல ஆலோசனை வழங்குதல், தலித் பெண்களை பாதுகாத்து அவர்களின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்க கூடிய ஆணாதிக்க, சாதிய வன்முறைகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்து வாழ்க்கை தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எவிடென்ஸ் அமைப்பினரிடம் பேசியபோது “உலகம் முழுவதும் ஆணாதிக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள், அதிலும் இந்திய சமூகத்தில் சாதியத்துடன், ஆணாதிக்கத்தையும், பொருளாதார பிரச்னைகளையும் எதிர்கொண்டு வாழ்ந்து வருபவர்கள் தலித் பெண்கள். இந்திய சமூகத்தின் ஜனநாயக அளவுகோலை தலித் பெண்களின் மேம்பாட்டை வைத்து அளவிடுவதுதான் சரியான நீதியாக இருக்கும்,

கருத்தரங்கம்

அந்தளவிற்கு தினமும் பல்வேறு தாக்குதல்களையும், சுரண்டல்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொணடு வருகின்றனர். விளிம்பு நிலை சமூகத்தின் கடைசி அடுக்கில் இருப்பவர்கள் இவர்களே, இத்கைய பெரும் அநீதிகளை எதிர்கொண்டாலும் அதை துணிச்சலுடன் எதிர்த்து போராடி சாதித்து வருகின்ற தலித் பெண்களும் கணிசமானோர் இருக்கின்றனர். அவர்களின் குரல்கள்தான் நீதிக்கான நம்பிக்கை பயணமாக இருக்கிறது. அவர்களை பேச வைப்பதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *