• August 12, 2025
  • NewsEditor
  • 0

தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 12 நாட்களாகப் போராடி வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகளுடன் போராட்டக்குழு நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இந்நிலையில், போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டுமென பெருநகர சென்னை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Sekar Babu

மாநகராட்சி வெளியிட்டிருக்கும் நோட்டீஸில், ‘பெருநகர சென்னை மாநகராட்சியில் இராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் (மண்டலம் 5 மற்றும் 6) திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியார் நிறுவனத்தின் வாயிலாக, கடந்த 16.07.2025 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 01.08.2025 முதல் வேலை நிறுத்தத்தில் சுய உதவிக் குழுவின் வாயிலாக பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் குறித்த விளக்கம் பின்வருமாறு – கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன், 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 25 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை 155ல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டு, 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்ட போது, திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளத் தேவைப்படும் கூடுதல் தூய்மைப் பணியாளர்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) கீழ், சுய உதவிக் குழுக்கள் மூலமாக தற்காலிக அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Sekar Babu & Priya
Sekar Babu & Priya

இந்த முறையில், பணியாளர்களின் வருகை அடிப்படையில், தினக்கூலி ஊதியம் கணக்கிடப்பட்டு, அவர்களைப் பணியில் ஈடுபடுத்திய சுய உதவிக் குழுவின் வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகிறது. பின்னர், அந்த வங்கிக் கணக்கிலிருந்து தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் ஊதியமானது ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கும் சுய உதவிக் குழுவால் செலுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேற்கூறிய வெளி முகமைப் பணியானது (Outsourcing) சுய உதவிக் குழுக்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து, 10 மண்டலங்களில் முழுமையாகவும்

1 மண்டலத்தில் பகுதியாகவும் பொது – தனியார் பங்களிப்பு முறைமையில் (PPP Mode) திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கூறிய 11 மண்டலங்ளிலும், ஏற்கனவே சுய உதவிக் குழுக்களின் மூலம் பணியாற்றி வந்த 4994 தற்காலிக தூய்மைப் பணியாளர்களை தனியார் நிறுவனங்கள் ஈர்த்துக் கொண்டு, பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அவர்களுக்கான ஊதியம் தற்போது இந்த நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சியில் எஞ்சியுள்ள நான்கு மண்டலங்களில், மண்டலம் 5 மற்றும் 6 இல் மேற்கூறிய அதே முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த மாற்றத்தின் போது, கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த தற்காலிக பணியாளர்கள் அனைவரும் புதிய நிறுவனத்தின் கீழ் இணைந்து பணியாற்றிட வழிவகை செய்யப்பட்டது. சென்ற ஆண்டுகளில் 11 மண்டலங்களில் தூய்மை பணி முறை மாற்றப்பட்டபோது செயல்படுத்தப்பட்ட அதே நடவடிக்கைகள் தற்போதும் பின்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இரண்டு மண்டலங்களில், சுய உதவிக்குழு அமைப்பின் கீழ் பணியாற்றி வந்த தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் இதனை ஏற்காமல், தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்றும் தனியார் நிறுவனத்தின் கீழ் பணிபுரிய மாட்டோம் என்றும் வலியுறுத்தி ரிப்பன் கட்டட வளாகத்தின் முன்புறத்தில்,

கடந்த 01.08.2025 முதல் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக சென்னை மாநகராட்சிக்கு வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

Chennai Corporation
Chennai Corporation

இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் அவர்கள் கடந்த 06.08.2025 அன்றும், அதனைத் தொடர்ந்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களாலும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், இணை ஆணையர் (சுகாதாரம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோராலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளுடன்

12-க்கும் மேற்பட்ட சுற்றுக்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டில் மண்டலம் 1, 2, 3, மற்றும் 7ல் பகுதி (3 வார்டுகள்), 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி முறை மாற்றப்பட்டபோது அம்மண்டலங்களில் பணிபுரிந்து வந்த சுய உதவிக்குழுக்களின் தற்காலிகத் தூய்மைப்பணியாளர்கள், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியில் சேர்ந்து, பணியாற்றி வருவதைப்போல, மண்டலம் 5 மற்றும்

6-ல் தற்போது பணியாற்றி வரும் தற்காலிக தூய்மைப்பணியார்களும் உரிய பணி பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளுடன் பணியில் சேர்ந்து, தங்களது பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும், தொழில் தீர்ப்பாயத்தில் முறையீடுகளும் செய்யப்பட்டுள்ளதால், அவற்றின் மீது வரும் முடிவுக்குட்பட்டு, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மண்டலம் 5 மற்றும் 6-ல் வசிக்கும் மற்றும் வந்து செல்லும் ஏறத்தாழ

20 லட்சம் பொதுமக்களுக்கான பொது சுகாதார சேவைகள் பாதிக்கப்படுவது மிக முக்கியமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. போராட்டம் தொடர்வதால் இந்த மண்டலங்களில் தூய்மைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு குப்பைகள் தேங்கி மக்களுக்கு பெரும் சுகாதார பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சென்னை மாநகராட்சிக்கு உள்ளதால் இதற்கான அனைத்து முயற்சிகளையும் சென்னை பெருநகர மாநகராட்சி தொடர்ந்து எடுத்து வருகின்றது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, பல்வேறு மண்டலங்களில் பணிபுரிந்து விருப்பக் கடிதம் அளித்த 4994 பணியாளர்களும் உர்பேசர் (Urbaser) மற்றும் ராம்கி (Ramky) ஆகிய தனியார் நிறுவனங்களில், அச்சமயம் பணியில் ஈர்த்துக் கொள்ளப்பட்டனர்.

தற்பொழுது மண்டலம் 5 மற்றும் 6ல் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணிகள் ராம்கி (Ramky) நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு, 16.07.2025 முதல் அந்நிறுவனம் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம், ஒப்பந்தப்படி, மொத்தம்

3,809 தூய்மைப் பணியாளர்களை பணியில் நியமிக்க வேண்டும். தற்போது வரை

1,770 பணியாளர்களை இந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. மீதமுள்ள 2,039 பணியிடங்கள், ஏற்கனவே பணியாற்றி வந்த சுய உதவிக் குழுக்களின் தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்காக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தலின்படி ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில்

300 தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எந்தவொரு தற்காலிக தூய்மைப் பணியாளரும் நீக்கப்படவோ, பணி மறுப்பு செய்யப்படவோ இல்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.

இதுநாள் வரை சுய உதவிக் குழுக்கள் மூலமாகவே பணியில் ஈடுபடுத்தப்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், தற்போது தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு பணியாளர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனர்.‌ எனவே இந்த புதிய முறையின்கீழ் இதுவரை கிடைக்காத பணிப்பாதுகாப்பும் பல சலுகைகளும் இந்தப் பணியாளர்களுக்கு கிடைத்திட வழி ஏற்பட்டுள்ளது. இப்பணியாளர்களுக்கு

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

1. வருங்கால வைப்பு நிதி (PF),

2. ஊழியம் மற்றும் மருத்துவக்காப்பீடு (ESI),

3. போனஸ்,

4. பண்டிகை கால சிறப்பு உதவிகள்,

5. திருமண உதவித்தொகை மற்றும் கல்வி/ உயர்கல்வி உதவித்தொகை,

6. இன்சூரன்ஸ் திட்டத்தில் விபத்து மரணம்/ இயற்கை மரணம் உள்ளிட்டவற்றிற்கு நிவாரண இழப்பீடுநிதியும் வழங்கப்படுகின்றன.

7. ஆண்டுதோரும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன.

தொழிளாலர் நல நிதி

1. திருமண உதவித் தொகை – ரூ. 20,000/- வரை

2. கல்வி உதவித் தொகை – ரூ. 12,000/- வரை

3. மரண நிகழ்வுக்கான நிதி உதவி

4. புத்தகத்திற்கான நிதி உதவி

5. கணினி பயிற்சி நிதி உதவி

விடுப்பு மற்றும் விடுமுறை நாட்கள் பலன்கள்

1. தற்செயல் விடுப்பு – 12 நாட்கள் (பணமாக மாற்றும் வசதியும் உண்டு)

2. ஈட்டிய விடுப்பு – 12 நாட்கள் (பணமாக மாற்றும் வசதியும் உண்டு)

3. தேசிய விடுமுறை நாட்கள் (இரட்டிப்பு சம்பளம் பெரும் வசதியும் உண்டு) பணியாளர்கள்

இந்த நாட்களில் பணி செய்யாவிட்டாலும் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் பெறும் வசதி உண்டு.

மேலும் இலவச சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், காலணிகள், மழைக்கால உடைமற்றும் சுகாதார பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதனுடன் தமிழ்நாடு அரசின் தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலமாக பல்வேறு உதவிகள் மற்றும் சலுகைகளும் வழங்கப்படும்.

மேற்கூறிய பணி மற்றும் ஊதிய விவரங்கள் குறித்து விரிவாக தற்காலிக பணியாளர்களின் பிரிவினர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுவின் மூலமாக பணிகளை செய்து வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும், தனியார் நிறுவனம் பணியில் சேர்ப்பதையும் அவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பு மற்றும் பணப் பலன்கள் வழங்குவதையும் பெருநகர சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பொதுநலன் கருதியும், தங்களது பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொண்டும், உயர்நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு மற்றும் தொழில்தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்நோக்கி, உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.’ எனக் கூறப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *