
‘கிஸானாகோ… ஹமாரா கிஸானாகோ’ என்று இந்தியாவின் ‘ஒப்பற்ற பிரதமர்’ மோடிஜியையே பொறி கலங்கிக் கதற வைத்துவிட்டார், ‘உலக நாட்டாமை’ ட்ரம்ப்.
அதாவது, மக்களே… ‘விவசாயிகள்தான் எனக்கு முக்கியம். விவசாயிகளுக்காக எதையும் நான் இழக்கத் தயார்’ என்று இப்போது கூப்பாடு போடுகிறார், மோடிஜி. நம்ப முடியவில்லைதானே… ஆனால், நம்பித் தான் ஆக வேண்டும்.
‘அமெரிக்க அதிபர் ட்ரம்புடைய ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றால், இந்தியாவில் பால் விவசாயிகள் எல்லாம் பாதிக்கப் படுவார்கள். பருத்தி விவசாயிகள் எல்லாம் வயலில் தற்கொலை செய்து கொள்வார்கள். மரபணு மாற்று விதையில் விளைந்த மக்கா சோளத்தைக் கோழிகளுக்கும், மாடுகளுக்கும் தீவனமாகக் கொடுத்தால், அந்த உணவு மக்கள் உடல் நலனை பாதிக்கும். மாடு களுக்குக் கொடுத்தால், பால் மூலமாக தீராத நோய்களை மக்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். எனவே, அமெரிக்காவுடன் இந்தியா போட்ட வர்த்தக ஒப்பந்தம் நின்று போனது’ என்றெல்லாம்கூட டெல்லியில் நடந்த கூட்டத்தில் அலறல் போட்டிருக்கிறார், மோடிஜி.
ஃபினிஷிங் சரியில்லையேப்பா!
உண்மை… வேறு மாதிரி பல் இளிக்கிறது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை. ‘‘நாங்கள் கூறிய ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கவில்லை. அதனால், இந்தியாவின் பொருள்களுக்கு 50 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கிறோம்’’ என்று உலக நாட்டாமை ட்ரம்ப் ஆட்டம் காட்டுகிறார். `பணிந்து போவதா, இல்லை துணிந்து எதிர்ப்பதா’… என்று நம்ம மோடிஜிக்கு ஒரே குழப்பம். இறுதியாக, எப்படியோ துணிந்து ட்ரம்புக்கு எதிராகப் பேசியேவிட்டார், மோடிஜி.
இதைக் கேட்டதும், நம்ப முடியாமல் ‘அடடே… இது நம்ம மோடிஜியா?’ என்று, என் கைகளை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். எப்படியோ, நன்றி மோடிஜி… நன்றி. ஆனால், `எப்பவுமே உன்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையேப்பா’ என்கிற கதையாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் நமது பயமே. மோடிஜி, இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு உறுதியாக நிற்பார் என்பது தான் நமது சந்தேகமே! காரணம்… அவருடைய ‘வீரவாய்க்கிரம’ வரலாறு அப்படி!
ஆரம்பத்திலிருந்தே கதறுகிறோமே!
1995-ல் இருந்தே, “உலக வர்த்தக அமைப்பில் (WTO-World Trade organisation), இந்தியா சேராமல் இருப்பதுதான் நல்லது’’ என்று விவசாயிகள் கரடிக் கணக்காகக் கத்திக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், எந்த இந்திய ஆட்சியாளரும் கேட்பதாக இல்லை. அமெரிக்காவுக்கு மண்டியிட்ட அன்றைய காங்கிரஸ் மந்திரி மன்மோகன் சிங், இந்தியாவையும் உலக வர்த்தக அமைப்பில் இணைத்தார்.
‘`உலகம் ஒரு குடும்பம். விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. எனது நாடு, உனது நாடு என்று குறுகிய வட்டத்தில் யாரும் சிந்திக்க வேண்டாம். கூட்டுக் குடும்பமாக வாழ்வோம்’’ என்றெல்லாம் உலக நாட்டுத் தலைவர்கள் ஒன்றுகூடி கும்மி அடித்தார்கள்.
‘‘இது பேராபத்து, நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது அல்ல… வணிகம் என்பதே ஒரு கொள்ளைதான். வணிகத்தின் நோக்கமே அதிகப்படியான லாபத்தைக் குவிப்பது மட்டுமே. எனவே, வணிகத்தை ஒரு குடைக்குள் கொண்டு வருவதைவிட, தேவைக்கு ஏற்ப அவ்வப்போது, தேவைப்படும் நாடு, தேவைப்பட்ட பொருள்களை உபரியாக உள்ள நாட்டோடு பேசி வாங்கிக் கொள்வதுதான் நல்லது. அதுதான் நன்றாக இருக்கும். ஒப்பந்தம் என்று சிக்கிக் கொண் டால், இந்தியா போன்ற வளரும் நாடுகளை வளர்ந்த நாடுகள் ஒரேயடியாக விழுங்கி விடும்’’ என்று விவசாயிகளாக… விவசாய சங்கங்களாக உலகம் முழுக்க கத்திக் கத்திப் பார்த்தோம். எல்லாம் காற்றில்தான் கரைந்தனவே தவிர, யாருடைய காதுகளிலும் ஏறவே இல்லை.
அமெரிக்காவை உறுத்தும் மாபெரும் இந்தியச் சந்தை!
உலக நாடுகளின் வர்த்தக மந்திரிகள் மாநாடு, பல்வேறு நாடுகளில் பல தடவைகள் நடைபெற்றன. பேசிப்பேசி உலக வர்த்தக அமைப்பை, ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். விவசாயம் தவிர்த்து மற்ற பொருள்கள், உலக வர்த்தக அமைப்பில் சில பல சிறப்புப் பாதுகாப்பு ஷரத்துகளுடன் (Special safeguard mechanism) ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேறு வழியில்லாமல் போனதால், ‘`வளர்ந்த நாடுகள், தங்களுடைய நாட்டில் விவசாயத்துக்குக் கொடுக்கும் மானியங்களை நிறுத்தும் வரை, விவசாயத்தை உலக வணிகத்தில் சேர்க்கக் கூடாது’’ என்ற கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தோம். போனால் போகிறதென்று, விவசாயத்தை மட்டும் உலக வணிகத்தில் சேர்க்காமல் நிறுத்தி வைத்தார்கள்.
2005-ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பின் கூட்டம், ஹாங்காங்கில் நடைபெற்றது. ஆனால், விவசாயத்தை இதில் இணைத்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார், அன்றைய அமெரிக்க நாட்டாமை ஜார்ஜ் புஷ். ஆனால், ஒத்த கருத்து ஏற்பட வில்லை. ‘இந்தியாவில் நடுத்தர மக்களின் தொகை, அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகம். எனவே, எக்காரணம் கொண்டும் உலக வர்த்தக அமைப்பு சிதைந்து விடக்கூடாது’ என்று தன்னுடைய வர்த்தக மந்திரிக்கு அறிவுரை கூறி, அங்கே பேச வைத்தார், புஷ். அதாவது, இந்தியா மிகப்பெரிய வணிகச் சந்தை. அமெரிக்காவில் விளையும் விஷத்தைக் கூட இந்தியர்களின் தலையில் கட்டலாம் என்பதுதான் அதன் உள்ளர்த்தம்.

அமெரிக்க விவசாயிகளுக்கு கோடி கோடியாக மானியம்!
அடுத்தடுத்த மாநாடுகளில் அமெரிக்க நாட்டாமைகள் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க, விவசாயத்தையும் உலக வணிகத்தில் சேர்த்து விட்டார்கள். அமெரிக்காவில் விவசாயிகளுக்கு கோடி கோடியாக மானியம் கொட்டிக் கொடுக் கிறார்கள். இந்தியாவில் விவசாயிகளுக்கு மானியம் என்பதே மிகவும் குறைவுதான். அதுவும் இயந்திர உற்பத்தியாளர்களுக்கும், உரக் கம்பெனிகளுக்கும் கொடுக்கிறார்களே ஒழிய விவசாயிகளுக்கு நேரடியாக வந்து சேருவதில்லை. அப்படியிருக்க, அமெரிக்க விவசாயிகளோடு எப்படி இந்திய விவசாயிகள் போட்டிப் போடுவார்கள்?
அமெரிக்காவில் விவசாயம் மரபணு மாற்றப்பட்ட விஷ விதைகளால் செய்யப்படுகிறது. மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம், மரபணு மாற்றப்பட்ட சோயா, இந்தியச் சந்தைக்கு வருமேயானால், இந்திய விவசாயிகள் வாழ்வு சிதறி சின்னா பின்னமாகிவிடும். மரபணு மாற்றப்பட்ட விதைகளில் விளைந்த பொருள்களை உட் கொண்டால் மக்களுக்கு ஒவ்வாமை வரும் என்று அமெரிக்க விவசாய விளைபொருள் களைத் தடுத்து நிறுத்தினார்கள் விவசாயிகள்.
மரபணு மாற்று விதைகளுக்கு எதிராக இந்தியாவில் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள்… நடத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி முதலில் மரபணு மாற்றப்பட்ட விதைகளான பி.டி பருத்தியைத் திணித்தார்கள். எதிர்ப்பு எழுந்தபோது… ‘ஒருபோதும் உணவுப் பயிர்களில் பி.டி விதைகளை அனுமதிக்க மாட்டோம்’ என்று உத்தரவாதம் கொடுத் தனர். பிறகு, உணவுப் பயிரான கத்திரிக்காய், கடுகு, நெல் என பி.டி விதைகளைக் கொண்டு வந்து, ‘இந்திய மண்ணில் திணித்தே தீருவோம்’ என்று மன்மோகன் சிங் அரசு விடாப்பிடியாக நின்றது. எதிர்ப்புக் கிளம்பவே, அன்றைய மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையில் ஏழு இடங் களில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப் பட்டன. அதைத் தொடர்ந்து பி.டி உணவுப் பயிர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
பரிசோதனை என்கிற பெயரில் பகீர்!
வெளியில்தான் தடை என்று அறிவிக்கப் பட்டதே தவிர, அன்றிலிருந்து இன்று வரையிலும் ‘சோதனை முயற்சி’ என்கிற பெயரில் வேளாண் பல்கலைக்கழகங்களில் பி.டி உணவுப் பயிர்களைப் பயிரிட்டு வருகின்றனர். இதோ… கடந்த சில வாரங்களுக்கு முன்புதான், எச்.டி.பி.டி (HTBt-Herbicide Tolerant Bt) விதைகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு மத்திய விவசாய மந்திரி சிவராஜ் சிங் சௌகான், கோயம்புத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நிபுணர்களை அழைத்து கூட்டம் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்.
‘விதையிலேயே களைகளைக் கொல்லும் விஷத்தை புகுத்திய விதை வந்துவிட்டது. இனி விவசாயிகளுக்கு, களை எடுக்கும் செலவு இல்லை. நிறைவான விளைச்சல் கிடைக்கும். லாபம் கொட்டும்’ என்று கூறி பின்வாசல் வழியாக மரபணு மாற்றப்பட்ட விஷ விதைகளை நுழைக்க, பன்னாட்டு கம்பெனிகள் போட்ட சதித்திட்டத்தின்படி அமைச்சர் சவுகான் அங்கே பேசியிருக்கிறார்.ஒரு மாதம்கூட ஆகவில்லை. ‘மரபணு மாற்றப்பட்ட விதைகளில் விளைந்த மக்காச் சோளம் வந்துவிடும்; மரபணு மாற்றப்பட்ட விதையில் விளைந்த சோயா எண்ணெய் வந்துவிடும்’ என்று மோடிஜி கூப்பாடு போடுகிறார்.
‘நாங்கள் அதை ஏற்க மாட்டோம், இதை ஏற்க மாட்டோம். எங்கள் விவசாயிகள்தான் எங்களுக்கு முக்கியம்’ என்று மோடிஜி கூப்பாடு போடுவதைப் பார்த்து இந்திய விவசாயிகள் மட்டுமல்ல… உலக விவசாயி களே கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.
‘அமெரிக்கா விஷம் வேண்டாம்… நாங்களே தயாரித்துக் கொள்கிறோம்!’
ஏற்கெனவே, இந்தியா முழுக்க பி.டி விதைகளை உள்நாட்டுத் தயாரிப்பு என்கிற பெயரில் இதே மோடிதான் திணித்து வைத்துள்ளார். அதாவது, பன்னாட்டு நிறுவனங்களின் பெயர்களின் வந்தால்தானே பிரச்னை என்று, அந்த நாட்டு நிறுவனங் களுடன் உள்நாட்டு தொழிலதிபர்களைக் கைகோக்க வைத்து, இந்திய வேளாண் பல்கலைக்கழகங்களில் சட்டபூர்வமாகவே பி.டி உணவுப் பயிர் பரிசோதனை என்கிற பெயரில் கடைவிரிக்க அனுமதி கொடுத் திருக்கிறார். ஆனால், இந்தப் பக்கம்… பி.டி உணவுப்பயிர்களை அனுமதிக்கவே மாட்டோம் என்று கூப்பாடு போடுகிறார். ‘அமெரிக்கா கொடுக்கும் விஷம் வேண்டாம்… நாங்களே விஷத்தை உற்பத்தி செய்து கொள்கிறோம்’ என்பதுதான் உங்கள் கொள்கையா மோடிஜி?
டெல்லி சலோ… விவசாயிகள் பலி! – மறக்க முடியுமா மோடிஜி?
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக, இந்திய வேளாண்மைக்கும் விவசாயிகளுக்கும் எதிரான மூன்று கொடிய சட்டங்களைப் போட்டவரே நீங்கள்தானே மோடிஜி. டெல்லி சலோ என்று ஓராண்டுக் கும் மேலாக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடினர்… 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளை பலி கொடுத்தனர்… கடைசியில் நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் வேறு வழியே இல்லாமல் அந்தச் சட்டங்களை வாபஸ் வாங்கினீர்கள். கூடவே, விவசாயிகளிடம் மன்னிப்பும் கேட்டீர்கள். அப்போது, ‘குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கட்டாயம் கொடுப்பேன்’ என்று வாக்குறுதி அளித்தீர்களே… என்ன ஆச்சு? ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு களுக்கும் மேலாகிறது.

இங்கிலாந்துக்கு ஆதரவு… அமெரிக்காவுக்கு எதிர்ப்பு?
இன்னொரு விஷயம் தெரியுமோ… இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இங்கி லாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறார், மோடிஜி. அடுத்தபடியாக, ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வணிக ஒப்பந்தத்துக்கும் தயாராகி விட்டார், ஏழைத்தாய் பெற்றெடுத்த இந்திய மகன் மோடிஜி. அந்த ஒப்பந்தங்கள் நிறைவேறினால், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடு களிலிருந்து பால் பொருள்கள் இந்தியச் சந்தைக்கு வராதா?
நாள் ஒன்றுக்கு 300 ரூபாய், 400 ரூபாய் மானியம் பெறும் ஐரோப்பிய நாட்டின் மாடுகளின் பால் பொருள்கள், நம்ம ஊர் சந்தையில் குவிந்தால், ஒரு ரூபாய்… இரண்டு ரூபாய் மானியம்கூட பெற முடியாமல் தவிக்கும் இந்திய பால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா?
இப்படி ஊர் சுற்றும் நாடுகளிலெல்லாம் தடையற்ற வர்த்தகத்துக்கு வாசலைத் திறந்துவிட்டபோது, மோடியின் ஆன்மா கொதிக்கவில்லை. இப்போது மட்டும் விவசாயிகள் மீதும், மக்கள் மீதும் திடீரென்று பாசம் கொப்புளிக்கிறது?
உங்கள் 56 இன்ச் மார்பு… உண்மையாகத்தான் துடிக்கிறதா?
இப்படிப்பட்ட மோடி, இன்று அமெரிக்கா வுக்கு எதிராக தன் 56 இன்ச் மார்போடு வீரம் காட்டுகிறார். அதனால்தான் நம்ப முடியவில்லை.
ம்… அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்ட போட்டில், ‘ஹமாரே கிசான்… ஹமாரே கிசான்…’ என்று துடிக்கிறார். உங்கள் 56 இன்ச் மார்பு உண்மையிலேயே துடிக்கிறது என நாங்கள் நம்ப வேண்டும் என்றால், உடனடியாக இந்திய வேளாண் பல்கலைக் கழகங்களில் நடக்கும் ‘மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர் விதைகள் தொடர்பான ஆராய்ச்சியை ஒரே கையெழுத்தில் நிறுத்துங்கள்.
பருத்தியின் காய்ப்புழுவுக்கு எதிராகக் களமாடும் என்று கொண்டுவரப்பட்ட போல்கார்டு 1, போல் கார்டு 2 பி.டி விதைகள் பல் இளிக்கின்றன. காய்ப்புழுக்கள், பி.டிக்கு எதிராக வீரியம் பெற்றுவிட்டன. இதனால், குஜராத், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து விதைகளை வாங்கியவர்கள் நஷ்டப்பட்டு கதறுகிறார்கள்… தற்கொலை செய்து கொள்கிறார்கள். உலகம் முழுக்கவே இதுதான் நிலைமை.
சுதேசி பெயரில் விதேசிகளின் கடைகள்!
பி.டி விதைகளை அறிமுகப்படுத்திய அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனமே, துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று கடையை மூடிவிட்டு ஓடிவிட்டது. ஆனால், அதே கடையை விலைக்கு வாங்கி விட்ட ஜெர்மனியின் பேயர் நிறுவனம், மறுபடியும் இங்கே கடையைத் திறக்கப் பார்க்கிறது, எச்.டி.பி.டி என்கிற பெயரில்.
அதற்குத்தான் வால் பிடிக்கிறார், உங்கள் வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான். அவரை விட்டே பி.டி விதைகளை அனுமதிக்க மாட்டோம் என்று உடனடியாக உத்தரவு போடச் சொல்லுங்கள். சுதேசி தயாரிப்பு என்கிற பெயரில், பன்னாட்டு விதேசி நிறுவனங்களுடன் உள்நாட்டு நிறுவனங்கள் செய்யும் திருட்டு வியாபாரக் கடைகளை இழுத்து மூட உத்தரவிடுங்கள்… அப்போது நம்புகிறோம்!
உலகம் சுற்றும் மோடி அவர்களே… உங்கள் கூட்டாளிகள் அம்பானி, அதானி யிடம் கேட்டுப் பாருங்கள்… வணிகம் என்று வந்துவிட்டால், இதுதான் நிஜம். ஏரோ ப்ளேனில் போய் இறங்கியதுமே ட்ரம்ப் கட்டிப்பிடித்துவிட்டால், அது பாசம் அல்ல என்று இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள்!