
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ‘கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்’ என்றும் இண்டியா கூட்டணி குற்றம்சாட்டி வருகிறது.