
திருநெல்வேலி: தேர்தல் ஆணைய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாகும் என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதியேற்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார், மாநகராட்சி துணை மேயர் ராஜு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்று போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பணியை சிறப்பாக செய்த பள்ளி, கல்லூரிகளுக்கு சட்டப் பேரவை தலைவர் விருது வழங்கி பாராட்டினார்.