
சமீபத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய நீதிபதிக்கு எதிராக ராஜ்ய சபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தாப் தன்கர் விவாதத்திற்கு ஏற்றதால் மத்திய அரசு அவர் மீது கடும் அதிருப்தியடைந்தது என்ற தகவல் வெளியானது.
இந்தநிலையில் தான் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். துணை ஜனாதிபதி பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய ஜெகதீப் தன்கர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் எந்த வித பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.
இது குறித்து சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி இருக்கிறார். சஞ்ய் ராவத் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ”ஜெகதீப் தன்கரிடம் கடைசியாக ஜூலை 21-ம் தேதி பேசினேன். அன்று ராஜ்ய சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது நல்ல உடல் நலத்துடன் இருந்தார். ஆனால் அன்று மாலை 6 மணிக்கு அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அவர் ராஜினாமா செய்த நாளிலிருந்து, அவரை எங்கேயும் காண முடியவில்லை. அவர் எங்கே? அவரது உடல்நிலை என்ன? அவர் யாருடன் இருக்கிறார்? அவர் எங்கே தங்கியிருக்கிறார்? அவர் நலமாக இருக்கிறாரா? அவர் உண்மையில் இருக்கிறாரா?” என்று ராவத் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ரஷ்யா, சீனாவில் இருப்பது போன்ற ஒரு நடைமுறை..!
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”தன்கர் இல்லாதது குறித்து தனக்கு சந்தேகமாக இருக்கிறது. நாட்டின் துணை ஜனாதிபதி இப்படி மறைந்துவிட்டார், அவரைப் பற்றி யாருக்கும் எந்த கவலையும் இல்லை என்றால், அது நாட்டின் ஜனநாயகத்திற்கு கவலை அளிக்கும் விஷயம் ஆகும். ரஷ்யா, சீனாவில் இருப்பது போன்ற ஒரு நடைமுறை இந்தியாவில் தொடங்கியிருந்தால், ராகுல் காந்தியும் அவரது கூட்டணி கட்சி தலைவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்கள் ரஷ்யா மற்றும் சீனாவில் காணாமல் போகும் நிலை இருக்கிறது. அது போன்ற ஒரு நடைமுறை இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா?. உத்தவ் தாக்கரே டெல்லிக்கு வந்தபோது, கபில் சிபல் அவரைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து நாங்கள் அவரிடம் விவாதித்தோம். எனவே ஜெகதீப் தன்கரை ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்வது குறித்து எங்களது கட்சி பரிசீலித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்..