
சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 19 வயதன இளம்பெண். இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 10.08.2025-ம் தேதி அந்த இளம்பெண் வேலைக்கு புறப்பட்டார். ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே அந்தப் பெண், நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், இளம்பெண்ணை வழிமறித்தார். பின்னர் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இளைஞர் ஆபாச செயலில் ஈடுபட தொடங்கினார். அதனால் அந்த இளம்பெண் முகம் சுளித்ததோடு இளைஞரைக் கண்டித்தார். ஆனால், இளைஞரோ, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்களிடம் இளைஞரின் செயல் குறித்து கூறினார். அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இளைஞரை மடக்கி பிடிக்க முயன்றனர்.
உடனே இந்த இளைஞர், பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக செல்ல முயன்றார். ஆனால் சாலையில் சென்றவர்கள் இளைஞரை ஓடிச் சென்று மடக்கிப் பிடித்ததோடு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த இளைஞரையும் பைக்கையும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து பாலியல் தொல்லைக்குள்ளான இளம்பெண், ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து புகாராக கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபரின் பெயர் ஜெகதீஷ், (40) என்றும் இவர், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீஷை கைது செய்த போலீஸார் அவரின் பைக்கையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெகதீஷ், சிறையில் அடைக்கப்பட்டார். ஜெகதீஷின் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரால் ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது