
புதுடெல்லி: பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 476 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அக்கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29-ஏ-ன்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் (தேசிய / மாநில / பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத) பதிவு செய்துள்ளன. இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அமைப்பும் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின், சின்னம், வரி விலக்கு உள்ளிட்ட சில சலுகைகள் மற்றும் பயன்களைப் பெறுகின்றன.