
பாலிவுட்டுக்கு தென்னிந்திய சினிமாவை சேர்ந்த இயக்குநர்களும், நடிகர்களும் வருவது சமீப காலமாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் பாலிவுட்டில் எந்த ஒரு தென்னிந்திய இயக்குநர் அல்லது நடிகரால் நிலைத்து நிற்க முடிவதில்லை.
நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள வார் 2 படம் வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.பாலிவுட்டில் அறிமுகமாகிறார். படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 55 ஆயிரம் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன. படத்தின் வெளியிட்டுக்கு முன்பு மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஹிர்த்திக் ரோஷனும், ஜூனியர் என்.டி.ஆரும் சேர்ந்து கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜூனியர் என்.டி.ஆர், ”உங்களுடன் பணியாற்றியதில் என்னால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. உங்களுடன் திரையில் வருவதற்கு நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். என்னை ஒரு சகோதரனாக நடத்தியதற்கு மிக்க நன்றி. என்னை பாலிவுட்டிற்கு இருகரம் நீட்டி வரவேற்றதற்கு மிக்க நன்றி” என்று ஹிர்த்திக் ரோஷனை பார்த்து பேசினார்.
பின்னர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியை பார்த்து, ”சார் நான் தென்னிந்தியாவிலிருந்து வருகிறேன். ராஜமௌலிக்கு நன்றி, அவர் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான நிறைய தடைகளை தகர்த்துவிட்டார்.
ஆனாலும், ஒவ்வொரு தென்னிந்தியருக்கும் பாலிவுட் தென்னிந்தியர்களை ஏற்றுக்கொள்ளுமா என்ற ஒரு வித சந்தேகம் இருக்கிறது” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஹிர்த்திக் ரோஷனை பார்த்து பேசுகையில், ” என்னை இரு கரங்களுடன் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி சார். முதல் நாளில் இருந்து நீங்கள் என்னை அரவணைத்து சென்றதற்கு மிக்க நன்றி, இதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்”என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய ஹிரித்திக் ரோஷன், ”ஜூனியர் என்.டி.ஆர்.ரில் நான் என்னையே நிறையப் பார்க்கிறேன்.
25 வருடங்களாக நாங்கள் ஒரே மாதிரியான பயணங்களைச் செய்திருக்கிறோம். மேலும் ஜூனியர் என்.டி.ஆர். என்னிலும் தன்னைக் கொஞ்சம் காண்கிறார் என்று நினைக்கிறேன். அவர் ஒரே முறையில் மறு டேக் எடுக்காமல் நடிக்கக்கூடியர் என்று சொல்வது உண்மைதான். படப்பிடிப்பில், ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை நான் பார்க்கமட்டும் இல்லை. அவரிடமிருந்து கற்றும் கொண்டேன். ஒரு ஷாட்டில் 100 சதவீதம் எப்படிச் நடிக்கவேண்டும் அவரிடம் கற்றுக்கொண்டேன். நான் அதை என் எதிர்கால படங்களில் பயன்படுத்துவேன். அதை எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கு ஜூனியர் என்.டி.ஆர்.ருக்கு நன்றி.” என்று தெரிவித்தார். வார் 2 படத்தில் கியாரா அத்வானி நடித்துள்ளார்.