
அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக அடிக்கடி ஏராளமானோர் இந்தியாவிற்குள் வருகின்றனர். அவர்கள் மும்பை போன்ற நகரங்களில் கூலி வேலை செய்கின்றனர்.
இதே போன்று பங்களாதேஷில் வேலை வாங்கித்தருவதாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மும்பை அருகில் உள்ள வசாய் நைகாவ் என்ற இடத்தில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் தகவல் கிடைத்தது.
உடனே போலீஸார் அங்கு ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 12 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது அவரது சொந்த நாடு பங்களாதேஷ் என்று தெரிய வந்தது.
அப்பெண்ணை இந்நிலைக்குத் தள்ளியது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தபோது, அவரைக் கடத்தல்காரர்கள் குஜராத் மாநிலம் நாடியாட் என்ற இடத்திற்கு அழைத்து சென்றதாகவும், அங்குப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகவும், அப்போது 3 மாதத்தில் 200 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொண்டு நிறுவனத்தில் நிர்வாகி ஆபிரகாம் கூறுகையில், ”மீட்கப்பட்ட சிறுமி பள்ளியில் படித்தபோது ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் பெற்றோருக்குப் பயந்து தனக்கு தெரிந்த ஒரு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். அப்பெண் சிறுமியை இந்தியாவிற்குள் அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 200 பேரைக் கைது செய்யவேண்டும். வாஷி மற்றும் பேலாப்பூர் பகுதியில் மைனர் பெண்களைச் சிலர் பிச்சை எடுக்க வைத்துள்ளனர். கிராமங்களில் இருந்து குழந்தைகளைத் திருடி மைனர் சிறுமிகளிடம் கொடுத்து பிச்சை எடுக்க வைக்கின்றனர்.

மைனர் பெண்கள் விரைவில் பருவம் அடைய ஹோர்மோன் ஊசி போட்டு பருவம் அடைந்ததும், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்” என்று தெரிவித்தார்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் நிகேத் கெளஷிக் கூறுகையில், ”இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.