• August 11, 2025
  • NewsEditor
  • 0

பாரம்பர்ய நகரான மதுரை, தமிழகத்தின் அரசியல், ஆன்மிகம், கலை, இலக்கிய செயல்பாட்டுகளுக்கான மையமாகும். அவை மட்டுமின்றி பல்லாயிரம் ஆண்டுகால தமிழர்களின் வரலாற்றையும், ஆட்சி செய்தர்களின் கதைகளையும் சுமந்து கொண்டிருக்கும் பண்பாட்டுத் தலைநகரமாகும்.

கலந்துகொண்டவர்கள்

ஆன்மிக அடையாளமாகத் திகழும் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுடன் மதுரை நகருக்குள்ளும், வெளியிலும் பல்வேறு வரலாற்றுச் சின்னங்களின் பொக்கிஷமாக காட்சி அளித்து வருகின்றன.

இவ்வளவு பெருமை வாய்ந்த மதுரையின் தொன்மை சிறப்புகளை இக்கால தலைமுறையினருக்கு கடத்தும் நோக்கில், எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் செயல்படும் ‘பசுமை நடை’ குழுவினர் மாதம்தோறும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்குப் பல ஆண்டுகளாக அழைத்துச் செல்கிறார்கள்.

பசுமை நடை

அந்த வகையில் இந்த மாதம் பொய்கைக்கரைப்பட்டி பசுமை நடை பயணத்தில் நாமும் கலந்து கொண்டோம். அதிகாலையிலேயே அழகர் கோயில் செல்லும் சாலையில் உள்ள கடச்சனேந்தலில் எல்லோரும் சங்கமாமானோம்.

மதுரை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். ஏற்பாடு செய்திருந்த அருமையான சிற்றுண்டியால் பசியாற்றிவிட்டு அழகர்மலையைப் பார்த்தவாறு பொய்கைக்கரைப்பட்டிக்குப் பயணமானோம்.

எழுத்தாளர்கள் அ.முத்துகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்க, சித்திரைவீதிக்காரன், ரகுநாத், சேவற்கொடியோன் உள்ளிட்டோர் பசுமை நடை குறித்தும், தற்போது செல்கின்ற பொய்கைக்ரைப்பட்டி குறித்தும், அது சார்ந்த பல பண்பாட்டு விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

காலை உணவு

பசுமை நடை குழுவினருக்கு இது 250 வது பசுமை நடைப்பயணம், இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. புதிய திசையில் எடுத்துவைக்கும் முக்கியமான முயற்சிதான் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

மதுரையின் 2000 ஆண்டு பழமையான வரலாற்றையும், தொல்லியல் பாரம்பர்யத்தை குழந்தைகளுக்கே உகந்த வகையில் அறிமுகப்படுத்த வேண்டும், புத்தகங்களில் படித்த மதுரையின் பாரம்பர்யக் கோயில்கள், கல்வெட்டுகள், பாறைகள், மலைகள் என அனைத்தையும் நேரடியாகக் காணும் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புதான் என்றனர்.

இந்தப் பயணம் அழகர்மலையை மையமாகக் கொண்டு, பொய்கைக்கரைப்பட்டி அருகிலிருந்து தொடங்கியது. கண்ணுக்குக் குளிர்ச்சியான இயற்கைக் காட்சிகளால் மட்டுமல்லாமல், நெஞ்சை நெகிழச் செய்யும் தொல்லியல் சின்னங்கள், சமணர் படுக்கைகள், பழங்கால நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் வழியாக நடந்தோம்.

பசுமை நடைப்பயணம்

அழகர் மலையைச் சுற்றியுள்ள பாரம்பர்ய வழிபாட்டுத் தலங்கள், சிற்பங்கள், சங்ககால எழுத்துக்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவான விளக்கம் அளித்தபடி வந்தனர்.

மேலும் கூறும்போது, “அழகர்கோயில் வழி, அலங்காநல்லூர் வழி, மேலூர் வழி ஆகியவை, மதுரையை நோக்கி செல்லும் முக்கிய வழிகள். அழகர் மலையைச் சுற்றியுள்ள வழிகள் சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள நிலங்களின் அடையாளங்களைக் கொண்டவை” என்றனர்.

இந்தப் பாதையில் உள்ள தல்லாகுளம், கோசாகுளம், புதூர், சம்பக்குளம், மருதங்குளம், காசாநேந்தல், காதக்கிணறு, சுந்தரராஜன்பட்டி, திருவுளான்பட்டி, செம்பியநேந்தல், தூயநேரி, கள்ளந்திரி எனப் பொய்கைக்கரைப்பட்டிக்கு முன் பல இடங்கள் வரிசையாக வந்தன. கால ஓட்டத்தில் நீர் நிலைகள் இருந்த இடங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.

விளக்கி சொல்லும் ஒருங்கிணைப்பாளர்

நீர் நிலைகளைச் சுற்றி உருவான இப்பகுதி ஊர்களைப் பற்றி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார், நீர் நிலைகளை வணங்கி ஆடிப்பெருக்கு அன்று விதை விதைக்கும் திருவிழாவை நடத்தி கொண்டாடுவது பண்பாட்டு திருவிழாவாக இருந்துள்ளது.

ஆடிப்பெருக்கு விழாவின்போது கிடா வெட்டு நடத்தும் நாட்டார் மரபு குறித்தும் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனைமலை, மாங்குளம், மீனாட்சிபுரம், கருங்காலக்குடி, கிடாரிப்பட்டி, கீழவளவு மலைகளின் தொல்லியல் வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது. பயணத்தின் முடிவாக அழகர் கோயில் வாசலை அடைந்தோம்.

இந்தப் பயணம், வெறும் நடைபயணம் அல்ல, நம் அடையாளங்களை மீட்டெடுக்கும் வரலாற்று வழிப்பயணம். சாதாரண பங்கேற்பாளராகச் சென்ற நாங்கள், பயண முடிவில், மதுரையை மட்டுமல்ல, வரலாறு பொதிந்துள்ள ஒவ்வொரு ஊரையும் நேசிக்கும் பண்பாட்டு ஆர்வலராக மாறிவிட்டோம்.

இதுபோன்ற பயணத்தை தொல்லியல் துறையும், மாவட்ட நிர்வாகமும், பண்பாட்டு ஆர்வலர்களும் இணைந்து ஏற்பாடு செய்து இன்னும் அதிகமான மக்களைப் பங்குபெற வைக்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *