• August 10, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியர் ஒருவரால் தமிழக இளைஞர் ஒருவர் கொலை செய்யபட்ட சம்பவம், அம்மாநில மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன், “புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் ரெஸ்ட்டோ பாரில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். புதுச்சேரி ரெஸ்ட்டோ பார்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுகிறது. தடை செய்யப்பட்ட உயர் வகை போதைப்பொருள் விற்பனையால் கலாசார சீரழிவுகள் நடைபெற்று வருவதாக தொடர்ச்சியாக அதிமுக அரசுக்கு எடுத்துக் கூறியிருக்கிறது.

அதிமுக அன்பழகன்

ஆனால் ஆளும் இந்த அரசு தொடர்ந்து அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது. இரவு 12 மணி வரை மட்டுமே ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிகாலை 4 மணி வரை இவை இயங்குகின்றன.

புதுச்சேரி முழுவதும் மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில் ஆட்டம், பாட்டம், மது, மங்கை, போதை வஸ்துக்களுடன் உல்லாசம் நடைபெற்று வருகிறது. அதிகாலை வரை இது போன்ற செயல்கள் நடைபெற காவல்துறை எவ்வாறு அனுமதி வழங்குகிறது என்று தெரியவில்லை. இந்த சம்பவம் அதிகாலை இரண்டு மணிக்கு நடைபெற்றுள்ளது.

ரெஸ்டோ பாரில் வாங்கும் மாமூலுக்கான விசுவாசத்தைக் காட்டும் விதமாக, கார் சாவியை வாங்கி வைத்துக் கொண்டு உயிருக்கு போராடிய இளைஞரை சுமார் ஒரு மணி நேரமாக மருத்துவமனைக்கு செல்லவிடாமல் போலீஸார் தடுத்திருக்கின்றனர்.

அதன் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கிறார். நகரப் பகுதியில் உள்ள ஒவ்வொரு ரெஸ்ட்டோபாரிலும் 10-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பணி புரிகிறார்கள்.

இவர்கள் குற்றப் பின்னணி உள்ளவர்களா, அல்லது குற்றப் பின்னணி இல்லை என்று போலீஸாரால் சான்றிதழ் பெற்றவர்களா என்பதை காவல்துறையினர் கண்காணிக்க தவறியது முதல் தவறு. இந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

பார்களுக்கு அனுமதி கொடுப்பது மட்டும் காலால்துறை வேலை அல்ல. அந்த பார்களை கண்காணிக்க வேண்டியதும் அவர்களின் கடமைதான். இதன் மீது காலால்துறை நடவடிக்கை என்ன என்பதையும் காவல்துறையினர் தெளிவுபடுத்த வேண்டும்.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

ரெஸ்ட்டோ பார்களில் போதை பொருட்களை விற்பனை செய்வது காவல்துறையின் உயர் அதிகாரிகள் முதல், கிரைம் போலீஸார் வரை அனைவருக்கும் தெரியும். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்படியான பார்களில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகிறது. மிஷன் வீதி டெஸ்ட்ரோ பாரில் நடந்த இந்தக் கொலைக்கு, பெரியகடை காவல் நிலையத்தில் இருக்கக்கூடிய அத்தனை அதிகாரிகளையும்  பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

அத்துடன் பார் நடத்த என்னென்ன விதிமுறைகள் இருக்கிறதோ அத்தனையையும் அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். கலால் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் யாருடைய ஏஜெண்டாகவும் செயல்படாமல், மக்களுக்காக பணியாற்ற வேண்டும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *