
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்த எஸ்.பி கண்ணன், வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பதற்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மீறி வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து தவறு செய்பவர்கள் இனி வீட்டில் தூங்க முடியாது என எஸ்.பி கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் தனிப்படை போலீசார் தீவிரமாக அப்பகுதியில் சோதனையில் ஈடுபடவும் உத்தரவிட்டார். இதில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கல் மற்றும் மூலப்பொருள்களை எடுத்து செல்லுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே வி.மீனாட்சியாபுரத்தில் ஜெயபால் (50), திருத்தங்கல் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோர் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
தாயில்பட்டி பகுதியில் குடோனில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட சிவகாசியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
திருத்தங்கல் ராஜபாண்டி (25), சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த காளிமுத்து (41), ஆகியோர் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்தனர்.

விருதுநகர் அருகே ஓ.சங்கரலிங்கபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு செய்வதற்கான மூலப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த பூமிநாதன் (62), வி.துரைசாமிபுரம் – பூசாரி நாயக்கன்பட்டி சாலையில் மினி சரக்கு வாகனத்தில் பட்டாசு மூலப் பொருள்களை எடுத்துச் சென்ற அன்பழகன், காளிராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் தொடர்ச்சியாக வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளம், மீனாட்சிபுரம், துரைச்சாமிபுரம் கனஞ்சாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான 7 தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.