
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயின் மிலாடு (46). கராத்தே மாஸ்டரான இவர் தனது வீட்டு தோட்டத்தில் உள்ள மைதானத்தில் கோஜு ரியூ ஒகினாவா என்ற பெயரில் கராத்தே அகடாமி நடத்தி வருகிறார்.
அவரிடம் கராத்தே தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் சென்றுவந்துள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை அந்த அகாடமியில் தற்காப்பு கலை பயிற்சிபெறச் சென்ற 9-ம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுமியும், 11-ம் வகுப்பு படிக்கும் அவரது அக்காவும் பயிற்சிக்காக சென்றனர். பயிற்சி முடித்து வீடு திரும்பிய 9-ம் வகுப்பு மாணவி மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். அதற்கான காரணம் குறித்து சிறுமியிடம் தாய் விசாரித்துள்ளார்.
அதிகாலை பயிற்சிக்கு சென்றபோது கராத்தே மாஸ்டர் ஜெயின் மிலாடு குட் டச், பேட் டச், பற்றி சொல்லி தருவதாக அவரது பழைய பாழடைந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சிறுமி அழுதுகொண்டே தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் 11-வது வகுப்பு படிக்கும் தனது மூத்த மகளிடம் என்ன நடந்தது என விசாரித்தார். கராத்தே மாஸ்டர் ஜெயின் மிலாடு ஏற்கனவே தன்னிடமும் பாலியல் சீண்டல் செய்ததாக மூத்த மகள் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ந்து போன தாயார் சம்பவம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கராத்தே மாஸ்டர் ஜெயின் மிலாடு மீது போக்சோ உள்ளிட்ட 4-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “கராத்தே பயிற்சிக்கு சென்ற சிறுமிகளிடம் குட் டச், பேட் டச் சொல்லிதருவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் ஜெயின் மிலாடு கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரால் வேறு சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட வேறு யாராவது இருந்தால் தைரியமாக புகார் அளிக்கலாம்” என்றனர்.