
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் தன்னுடைய கிரிக்கெட் பயணம் குறித்து அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் கம்பீர் குறித்தும் சூர்ய குமார் யாதவ் குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் நான் டக் அவுட் ஆனேன். அப்போது நான் மிகவும் மனம் உடைந்து அமர்ந்திருந்தேன். என்னிடம் வந்த பயிற்சியாளர் கம்பீர், `ஏன் நீ இவ்வாறு அமர்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டார்.
அதற்கு, `என்னால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை என வருத்தமாக இருக்கிறது’ எனச் சொன்னேன். அதற்கு பதிலளித்த கம்பீர், நீ 21 முறை டக் அவுட் ஆனால் கூட நான் உனக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவேன்.
உன்னை அணியை விட்டு நீக்க மாட்டேன் என்று நம்பிக்கை கொடுத்தார். பயிற்சியாளரின் இந்த பேச்சு எனக்கு நம்பிக்கை அளித்தது.
இதேபோன்று உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது டி20 அணியின் கேப்டனாக அப்போது அறிவிக்கப்பட்டு இருந்த சூர்ய குமாரும் என்னைச் சந்தித்தார். அதில் தற்போது நமக்கு ஏழு டி20 போட்டிகள் வரப்போகிறது.

இந்த ஏழு போட்டிகளிலும் உன்னை நான் தொடக்க வீரராகக் களமிறக்க உள்ளேன். நீ அதில் சரியாக விளையாடவில்லை என்றால்கூட அந்த ஏழு போட்டிகளில் தொடர்ந்து உனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இப்படி சூர்ய குமாரும் கம்பீரும் பேசிய விதம்தான் என் நம்பிக்கையை அதிகரித்தது” என்று கூறியிருக்கிறார்.