
‘இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்’ என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியிருக்கிறார்.
தனியார் கல்லூரியில் மாணவர்கள் உடனான கலந்துரையாடலின் போது பேசிய அவர், “இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு தவறான புரிதல் இருக்கிறது. நிறையே பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால் நான் 95 எடுத்தேன், நீங்கள் 70 மார்க் தான் எடுத்திருக்கீர்கள்.
ஆனால் 95 மதிப்பெண் எடுத்த என்னை ஒதுக்கிவிட்டு 70 மதிப்பெண் எடுத்த அவர்களுக்கு சீட் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். இது அவர்களுக்கான கோபம். ஆனால், 75 எடுத்தவர் ஒரு காலில் ஓடிக்கொண்டு இருக்கிறார். 95 எடுத்தவர் இரண்டு காலில் ஓடிக்கொண்டு இருக்கிறார்.
நான் இரண்டு காலில் ஓடி முதலிடம் வந்தேன். ஆனால் 50 மீட்டரில் உங்களுக்கு வெற்றி என்று சொல்லிவிட்டார்கள் என சொல்லக்கூடாது. அவர்களை எப்போது இரண்டு காலில் ஓட வைக்கிறமோ அதுவரைக்கும் ரிசர்வேஷன் என்பதை இந்த நாட்டில் இருந்து நாம் எடுக்க முடியாது.
இடஒதுக்கீடு கொடுத்ததால் தரம் குறைந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் இதை நான் ஏற்கவில்லை. இட ஒதுக்கீடு கொடுத்ததால்தான், பிசி, எம்.பி.சி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவுகளில் இருந்த புத்திசாலித்தனமானவர்கள் வந்திருக்கிறார்கள். அதனால் இதை பொத்தாம் பொதுவாக பேசமுடியாது. இதை தரவுகள் வைத்துதான் பேச முடியும். இட ஒதுக்கீடு இல்லையென்றால் அந்த குடும்பம் எல்லாம் தரையோடு தரையாக போய்விடும்.

இட ஒதுக்கீடு கொடுப்பதால் தரம் குறைகிறது என்ற வாதத்தை நான் எந்த காலத்திலும் ஏற்க மாட்டேன். அந்த மாதிரி ஒன்று கிடையவே கிடையாது. நாடு முன்னேற எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும். அந்த வாய்ப்பை கொடுப்பதற்கு இட ஒதுக்கீடு என்பது ரொம்ப முக்கியம். இதுதான் உண்மை” என்று பேசியிருக்கிறார்.