
சிக்குரு, கிரஞ்சம், கிழவீ, சோபாஞ்சனம் எனப் பல பெயர்களைக் கொண்ட முருங்கை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று சொல்லலாம். இதன் இலை (கீரை), காம்பு, பூ, காய், பிசின், பட்டை என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. முருங்கையில் காட்டு முருங்கை, கொடி முருங்கை, தவசி முருங்கை எனப் பல வகைகள் உள்ளன. முருங்கைக்கீரை எப்படிப் பயன்படுத்தினால், என்னென்ன பலன் கிடைக்கும் என சொல்கிறார் இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரிய நாயகம்.
* முருங்கைக்கீரையில் இரும்பு, தாமிரம், கால்சியம், வைட்டமின் உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. இந்தக் கீரையை நெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டால் ரத்தச்சோகை நீங்கும். பற்கள் கெட்டிப்படுவதுடன் சரும நோய்கள், சின்னச்சின்ன பார்வைக் கோளாறுகள் சரியாகும். மலச்சிக்கல் நீங்கும்.
* முருங்கைக்கீரையுடன் பாசிப்பருப்பும், தேங்காய்த்துருவலும் சேர்த்து பொரியல் செய்து வாரத்தில் மூன்று நாள்களேனும் இந்தக் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு மேம்படும். இது முடி உதிர்தல் பிரச்னைக்கும் நல்ல தீர்வு.

* முருங்கை இலையுடன் சம அளவு மிளகு சேர்த்து நசுக்கிச் சாறு எடுத்து, தலைவலி உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் நிவாரணம் கிடைக்கும். வெறும் இலையை அரைத்து வீக்கத்தின்மீது தடவினால் வீக்கம் விலகும்.
* முருங்கைக்கீரைச் சாற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்துப் பிசைந்து தொண்டையில் பூசினால் தொண்டைக்கட்டு, தொண்டைக் கரகரப்பு விலகி, சளிப் பிரச்னைகள் நீங்கும்.
* முருங்கைக்கீரை, மிளகு, சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த ரசத்தைச் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
* முருங்கைக்கீரையைப் பொடியாக நறுக்கி அதனுடன் துருவிய கேரட், பசு நெய், கோழி முட்டை, உப்பு, காரம் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டால் உடல் பலம் கிடைக்கும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…