
சென்னை: நீதிபதியின் அழைப்பை ஏற்று பாமக தலைவர் அன்புமணி தனது வழக்கறிஞர்களுடன் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கட்சியின் நிறுவனர் ராமதாஸ் காணொலி மூலம் ஆஜரானார். இருவரிடமும் தனது சேம்பரில் வைத்து பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை விசாரித்து பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்து ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ், அன்புமணிக்கு இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்குநாள் அதிகரித்து தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாமல்லபுரத்தில் ஆக.9-ம் தேதியான இன்று பொதுக்குழு கூட்டம் நடத்த அன்புமணி அழைப்பு விடுத்தார். இதற்கு தடை கோரி ராமதாஸ் ஆதரவு பொதுச் செயலாளரான முரளிசங்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.