
மும்பையில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்றும், மராத்திக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்றும் ராஜ் தாக்கரே கூறி வருகிறார். இதனால் மராத்திக்கு எதிராக பேசுபவர்களை அல்லது மராத்தி பேசாதவர்களை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் தாக்கி வருகின்றனர்.
மும்பை மீராபயந்தர், காட்கோபர் போன்ற இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. அது போன்ற ஒரு சம்பவம் மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் நடந்துள்ளது. கல்யான் கிழக்கு பகுதியில் ராயல் ஸ்டார் இட்லிவாலா என்ற உணவகம் இருக்கிறது. இந்த உணவகத்தின் உரிமையாளர் பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வெளியானது. அதில் மராத்தியர்கள் குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது.
இந்த வீடியோ குறித்து ராஜ் தாக்கரே கட்சி நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. உடனே ராஜ் தாக்கரே கட்சி நிர்வாகிகள் இட்லி கடைக்கு வந்து கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். `மராத்தி பேசுபவர்களிடம் ஏன் தவறாக நடந்து கொண்டீர்கள்?’ என்று கேட்டு தகராறு செய்தனர். அவர்கள் கடை உரிமையாளரை கடைக்குள் இருந்து வெளியில் இழுத்து சட்டை காலரை பிடித்து சரமாறியாக அடித்து உதைத்தனர். அதனை கடை உரிமையாளர் மகன் தடுக்க வந்தார். அவரை பிடித்து தள்ளிவிட்டு சரமாரியாக அடித்தனர்.
ஆனால் மராத்தி பேச வேண்டும்
அதோடு கைகூப்பி மன்னிப்பு கேட்க வைத்தனர். இது குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்தனர். அவர்கள் வந்து கூட்டத்தினரை கலைந்து போகச்செய்தனர். இட்லி கடைக்காரர் இது தொடர்பாக புகார் எதுவும் கொடுக்கவில்லை. இது குறித்து அக்கட்சி நிர்வாகி அங்குஷ் ரஜபுத் கூறுகையில், ”மகாராஷ்டிராவிற்கு யார் வேண்டுமானாலும் வந்து வாழட்டும். அதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ராஜ் தாக்கரேயும் யார் வேண்டுமானாலும் மகாராஷ்டிராவில் வசிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் மராத்தி பேச வேண்டும்.
மராத்திக்கு மதிப்பளிக்க வேண்டும். இட்லி கடைக்காரர் மகாராஷ்டிராவில் வசித்துக்கொண்டு மராத்திக்கு எதிராக பேசுகிறார். எனவேதான் அவருக்கு புரிய வைத்தோம். இனிமேல் மராத்தி மொழியைப் பற்றியோ அல்லது மராத்தி மக்களைப் பற்றியோ தவறாகப் பேசினால், அவர்களின் இடத்தை நாங்கள் அவர்களுக்குக் காண்பிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த மாதம் மாநில அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்க முயன்றது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை மாநில அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் ஒன்று சேர்ந்து போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.