• August 9, 2025
  • NewsEditor
  • 0

காவிரி வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படவில்லை என்று திமுக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

“காவேரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல முடியாத அளவுக்கு அவல நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம்

தமிழ்நாட்டின் உயிர்நாடி, காவிரியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கால்வாய்ப் பாசனத்தைச் சார்ந்த நிலங்களில் 85 விழுக்காடு நிலங்கள், காவிரி நீரை நம்பியுள்ளன. காவேரி ஆற்றில் இலட்சக்கணக்கான கன அடி நீர் திறக்கப்பட்டாலும் கடைமடை பகுதி வரை நீர் செல்வதில்லை. இதற்குக் காரணம் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததுதான்.

ஸ்டாலின்

காவேரி நீரில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தராமல் உபரி நீரைத் தருவதை கர்நாடகம் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது என்றாலும், இந்த ஆண்டு கர்நாடகாவில் அதிக மழை பெய்ததன் காரணமாக, தமிழ்நாட்டிற்கு உபரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்கிறது. சென்ற மாத இறுதியில்கூட, மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து சுமார் ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் காவேரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத அவல நிலையும், ஏரி குளங்கள் வறட்சியாக காணப்படுகின்ற சூழ்நிலையும்தான் நிலவுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பல வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகியுள்ளதாலும், தூர்ந்து போனதாலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள பல ஏரிகளும், குளங்களும் வறண்டும். குறைந்த நீருடனும் காட்சி அளிக்கின்றன. இதன் காரணமாக, ஏரி பாசனத்தை நம்பியுள்ள திருவோணம், ஊராணிபுரம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாமல் உள்ளனர்.

காவேரி
காவேரி

பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததும், பல வாய்க்கால்கள் சேதமடைந்துள்ளதும் ஏரி, குளங்கள் பாலைவனம் போல் காட்சி அளிப்பதற்கு மற்றொரு காரணம். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், நிதிப் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி வீரக்குடி வாய்க்காலில் தண்ணீரை பிரிக்கும் கீழ்குமுழி பல ஆண்டுகளாக சீரமைக்காததால் அந்தத் தண்ணீர் வீணாகச் செல்கிறது. இதன் விளைவாக, பம்ப் செட் வைத்திருப்பவர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு நூறு ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

காவேரி ஆற்றின் பாசன வாய்க்கால்களில் ஒன்றான மேட்டுகட்டளை வாய்க்கால் மூலம் செங்கிப்பட்டி வரை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டும், காவேரி ஆற்றை ஒட்டியுள்ள புங்கனூர், மலம்பட்டி, கொத்தமங்கலம், கே.கே. நகர், திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பல ஆண்டுகளாக போராடியும் எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை என்றும், நீர்நிலைகளை சீரமைத்த பாசனதாரர்கள் சங்கம் தற்போது இல்லை என்றும், ஆறுகள் மற்றும் ஏரிகளை கண்காணிக்கும் ‘லஸ்கர்’ எனப்படும் கரை காவலர்கள் பணியிடங்கள் தற்போது இல்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, விவசாய நிலத்திற்குச் செல்ல வேண்டிய காவேரி நீர் வீணாக கடலில் கலக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவேரி நீர் வீணாக கடலில் சென்று கலப்பதைத் தடுக்கும் வகையில், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அரசுப் பதிவேட்டில் உள்ள அளவுக்கு ஏற்ப பாசன வாய்க்கால்களை தூர் வாரவும், கிளை வாய்க்கால்களை புனரமைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *