
கோவை செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று இரண்டு பேர் கொலை வழக்கு ஒன்றில் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பாலமுருகன் (45) மற்றும் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகப்பெருமாள் (26) என்று தெரிந்தது.
இவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது இரண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் இருவரும் காவல்துறையில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
முருகப்பெருமாள் சென்னையில் உள்ளார். அங்கு அவருக்கு ஜெயராமன் (24) என்ற நண்பர் இருந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் முருகப்பெருமாள், ஜெயராமன் மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பெருமாள், ஜெயராமனை கொலை செய்துள்ளார்.
காவல்துறையில் சிக்காமல் இருப்பதற்காக அவர் பாலமுருகனின் உதவியை நாடியுள்ளார். பாலமுருகன் கோவையில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து ஜெயராமனின் உடலை கார் மூலம் சென்னையில் இருந்து கோவை எடுத்து வந்துள்ளனர்.
பிறகு மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் ஜெயராமனின் உடலை வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்று சுமார் 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஜெயராமனை காணவில்லை என்ற புகாரில் காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், முருகப்பெருமாள் மற்றும் பாலமுருகன் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர்.

கிணற்றில் இருந்த ஜெயராமனின் உடல் மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.