• August 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். தங்கள் மண்டலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது பணி நிரந்தரமுமே அவர்களின் கோரிக்கை. போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு நேற்று நள்ளிரவில் அமைச்சர் சேகர் பாபு கொடுத்த பத்திரிகையாளர் சந்திப்பு சமூகவலைதளங்களில் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.

சேகர் பாபு

குறிப்பாக, ‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்ததே…’ எனும் கேள்விக்கு, ‘நாங்க வாக்கு கொடுக்கலை. நாங்க எங்க சொன்னோம். வாக்குறுதியை கொடுங்கன்றேன்…கொடுங்கன்றேன்…’ என பிபி ஏறி பத்திரிகையாளர் மீது பாய்ந்திருந்தார். உண்மையிலேயே திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் பற்றி எதுவுமே கூறவில்லையா? உண்மை என்ன?

திமுக 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் இருக்கிறது.

அந்தத் தேர்தல் அறிக்கையில் பக்கம் எண் 43 மற்றும் 44 இல் தூய்மைப் பணியாளர் நலன் என தனித் தலைப்பிட்டு தனியாகவே 5 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். 281 லிருந்து 285 வரை நீளும் அந்த வாக்குறுதிகள் இங்கே

ரிப்பன் மாளிகை
ரிப்பன் மாளிகை

தூய்மைப் பணியாளர் நலன்

281. தற்போதுள்ள 50 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட சிறு நகரங்கள், ஏனைய நகரங்கள் மற்றும் மாநகரங்களில் திறந்த வெளி சாக்கடைகளை அகற்றுவதற்காகப் பாதாள சாக்கடைத் திட்டமும், திடக் கழிவு மேலாண்மைத் திட்டமும் முன்னுரிமை தரப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். இதன் மூலமாகத் தலைமுறை தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளருக்குப் பணி விடுதலையும் மாற்று வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

282. வாரம் ஒருநாள் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். அப்படி விடுமுறை நாட்களில் பணிபுரிய நேரிட்டால் கூடுதல் பணிநேர ஊதியம் (Over Time Wages) வழங்கப்படும்.

283. தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிர் இழக்க நேரிட்டால், அவருடைய வாரிசுதாரர்களுக்குக் கல்வித் தகுதியின் அடிப்படையில் உடனடியாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

284. தூய்மைப் பணியாளர் பணியில் இருக்கும்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், அதே துறையில் காலியாக உள்ள பதவிகளில் கல்வித் தகுதிக்கேற்ற பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கை

285. ஊராட்சிகள், அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்.

நாங்கள் எப்போது வாக்குறுதி கொடுத்தோம் என்ற சேகர் பாபுவின் அந்தர் பல்டி கேள்விக்கு 285 வது வாக்குறுதிதான் பதில். தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறதே? போராடிக் கொண்டிருக்கும் மக்கள் ஒன்றும் தாங்கள் இருக்கும் நிலையிலிருந்து இன்னொரு உயர் நிலைக்கு செல்ல வேண்டி போராடவில்லை. தாங்கள் இருக்கும் நிலையை தக்கவைத்துக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அதேமாதிரி, வாக்குறுதி எண் 282 இன் படி தூய்மைப் பணியாளர்ககுக்கு வார விடுமுறை கிடைத்திருக்க வேண்டும். போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு அதுவும் இப்போது வரை சாத்தியப்படவில்லை.

அதேமாதிரி, ஜனவரி 2021 இல் அவுட் சோர்சிங்கை எதிர்த்தும் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினே மாநகராட்சிக்கு கடிதமாக எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தை பெரிதாக ப்ளெக்ஸ் அடித்து வைத்துதான் இந்த மக்கள் ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கின்றனர்.

சேகர் பாபு
சேகர் பாபு

திமுக கொடுத்த வாக்குறுதிகளையும் எதிர்க்கட்சியாக இருந்த போது பேசிய வசனங்களையும் சேகர் பாபு போன்ற அமைச்சர்கள் வேண்டுமானால் வசதியாக மறக்கலாம். ஆனால், மக்கள் மறக்கமாட்டார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *