
கோவை மாவட்டம், சூலூர் அருகே கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வளாகம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. அதன் அருகிலேயே ரயில் தண்டவாளம் இருக்கிறது.
ஏதாவது கொலை சம்பவமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து சூலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் அவர்களும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள்.
காவல்துறை விசாரணையில், அது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகுபாண்டி என்பவரின் கை என்பது தெரியவந்தது. அழகுபாண்டிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதனிடையே அவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த அழகுபாண்டி, கள்ளபாளையம் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அப்போது அவரின் வலது கை மற்றும் கால்கள் துண்டாகியுள்ளது. தற்போது அழகுபாண்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அழகுபாண்டியின் துண்டிக்கப்பட்ட கை மற்றும் சிதைந்த கால்கள், கள்ளப்பாளையத்தில் உள்ள உயிரியல் மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அப்போது அங்கிருந்து ஒரு நாய் கையை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.