
பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துமுரண்பாடு காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் தனித் தனியே பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்கள். அதன்படி அன்புமணி தலைமையிலான பா.ம.க பிரிவு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடத்தி வருகிறது.
அந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, “நான் பொறுப்புகளுக்காகவும், பதவிகளுக்காகவும் இருப்பவன் அல்ல. என் மீது அதிக அன்பும், அதைவிட நம்பிக்கையும் வைத்து என்னோடு வந்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது. உங்களை கடமையுணர்வுடன் வழி நடத்துவேன். நம்முடைய இனமான காவலர், சமூக நீதிப் போராளி, நம்முடைய வழிகாட்டி மருத்துவர் அய்யா. அவர்தான் நம்முடைய இயக்கம், நம் சமுதாயம். நாம் அவருடைய கொள்கையை பின்பற்றுகிறோம்.
அவருடைய லட்சியங்கள், கனவுகளை எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றுவோம். அதில் மிக முக்கியமானது வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த அடிப்படையில் பின் தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களும் சமூக நீதிப் பெற வேண்டும், இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்ற அவருடைய நோக்கம், லட்சியம், கனவுகளை எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்பது மிக முக்கியமானது. நமக்கு இரண்டு இலக்குகள் இருக்கிறது. யார் ஆட்சிக்கு வரவேண்டும் யார் ஆட்சிக்கு வரக்கூடாது. இப்போது நம்முடைய ஒரு இலக்கு யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை தெளிவு படுத்திவிட்டோம். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை இன்னும் சில காலத்தில் முடிவு செய்து விடுவோம். நல்ல ஒரு மெகா கூட்டணி அமைத்து, நாம் ஆட்சிக்கு வருவோம்.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக நாம் கணக்கெடுத்தால் தி.மு.க-வினுடைய வாக்கு சதவீதம் 1.25 தான். ஆனால் அதை வைத்து மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள்.

எனவே நம்முடைய வாக்கு சதவிகிதம் 7% தான் என நாம் குறுகிய மனப்பான்மையில் இருக்கக்கூடாது. இப்படியான கட்சிகள் ஆட்சிக்கு வந்த பல உதாரணங்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. எதிர்வரும் ஆறு மாதங்கள் நம்பிக்கையோடு உழைக்க வேண்டும்.
நம்முடைய குலதெய்வம், வழிகாட்டி அய்யா அவர்கள்தான். அவர்கள் உருவத்தில் இந்த மேடையில் இல்லை என்றாலும், நம்முடைய மனதில் இருக்கிறார். அவருக்காக இங்கு நாற்காலி தயாராக இருக்கிறது. ஐயாதான் நம் கட்சியின் நிறுவனர் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. காலத்தின் கட்டாயத்திற்காக, உங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக, பொறுப்புகளுக்கும் பதவிகளுக்கும் ஆசைப்படாத நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.” எனப் பேசினார்.
தொடர்ந்து அவரின் பேச்சு இதில் சேர்க்கப்படும்…