• August 9, 2025
  • NewsEditor
  • 0

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுகவில் உறுப்பினர்கள் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “2021க்கு முன்பு சேலம் மாவட்டம் எப்படி இருந்தது என்று ஒப்பிட்டுப் பாருங்கள். அனைத்து அடிப்படை வசதிகளும் திட்டங்களும் செய்து கொடுத்தோம். ஏரிகள் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்பினோம். விவசாயிகள் வாங்கிய பயிர்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம். கைத்தறி, விசைத்தறி நிறைந்த இந்த பகுதி அதிமுக ஆட்சியில் செழிப்பாக இருந்தது. தற்போது திமுக ஆட்சியின் நிர்வாக திறனற்ற காரணத்தால் இந்த இரண்டு தொழில்களும் நலிந்து விட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்கள் மேம்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்கான பிரீமியம் அரசே செலுத்தும். மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு அனைத்து உபகரணங்களும் அரசே வழங்கும்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் உள்ள 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்து 6 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவந்தோம். திமுக ஆட்சியில் இந்த திட்டம் மெத்தனமாக நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 ஏரிகளும் நிரப்புவோம். தற்போது மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் கடலில் கலந்து வருகிறது. இந்த ஆட்சியாளர்கள் நினைத்து இருந்தால் எப்போதோ இந்த திட்டத்தை முடித்திருக்கலாம். அதிமுக ஆட்சியிலேயே 75 சதவீத பணிகள் முடிவுற்றது. 25 சதவீத பணிகள் இன்னும் இந்த ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள், விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் வழங்கப்படும். ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அரசு வீடு கட்டி தரும். நிலம் இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடுகள் கட்டி தரும். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அது அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைக்கக்கூடிய அற்புதமான தேர்தல் அறிக்கையாக அமையும்” என்று பேசினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *