
தாம்பரத்தில் இன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
பட்டா வழங்கும் விழாவில் ஸ்டாலின், “நேற்று தமிழ்நாட்டோட கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகிற மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டேன்.
இன்று மருத்துவமனை ஒன்றைத் திறந்துவைத்தேன். கல்வியும், மருத்துவமும் தான் திராவிட மாடலின் இரு கண்கள் என்று நான் அடிக்கடி கூறுவேன். அதற்கான எடுத்துக்காட்டு தான் இந்த இரு நாள்களின் நிகழ்ச்சிகள்.
நிலம்தான் அதிகாரம்!
பொதுவாக, ஒரு அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், நான் கேட்கும் முதல் கேள்வி, ‘இன்று எவ்வளவு பட்டாக்களை வழங்கப்போகிறோம்” என்பது தான்.
ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை – உண்ண உணவு, உடுத்த ஆடை, இருக்க இடம். இதில் உணவும், ஆடையும் எளிதாக கிடைக்கலாம். ஆனால், இருக்க நிலம் எளிதாக கிடைத்துவிடாது.
ஏனெனில், நிலம் தான் அதிகாரம். காலுக்கு கீழே நிலமும், தலைக்கு மேலே கூரையும் இன்னும் பலரின் கனவு. அதனால் தான், பட்டா வழங்குவதில் நான் தனி கவனம் செலுத்துவேன்.
ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமூதாயத்தைக் கட்டமைக்க, ஏழை, எளிய மக்களை மேம்படுத்த, பெண்களை முன்னிலைப்படுத்தியும் இந்த அரசு இலவச பட்டா வழங்கி வருகிறது.
வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு
தென்குமரியில் இருந்து சென்னை வரை சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து நாங்கள் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்… தொழில்நிறுவனங்களைக் கொண்டுவருகிறோம்… வேலைவாய்ப்புகளை உறுதி செய்கிறோம்.
இதனால் தான், திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு 11.19 விழுக்காடு பெற்று பொருளாதார வளர்ச்சியோடு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.
14 ஆண்டுகளுக்கு முன்பு, கலைஞர் ஆட்சிக்கு பிறகு தமிழ்நாடு இப்போது தான் இரண்டு இலக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வளர்ச்சி நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லை. ஏன், நாட்டிலேயே இல்லை. இது தான் திமுகவின் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி.
2011 – 2021-ம் ஆண்டுகளில் பின்னோக்கி சென்ற தமிழ்நாட்டை மீட்டெடுத்து உள்ளோம். வளர்ச்சியின் உச்சப்பாதைக்கு கொண்டு சேர்த்திருக்கிறோம்.

பழனிசாமியின் வயிற்றெரிச்சல்
இதைப் பொறுத்தகொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமியின் நண்பர் ஒன்றிய அரசு கொடுத்த புள்ளிவிவரத்தையே தவறு என்று இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்.
பொருளாதார அளவுகோல் தான் வளர்ச்சியின் அளவுகோல். இந்த அடிப்படையைக் கூட தெரியாத அறிவுஜீவியைப் போல அறிக்கை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.
இந்திய அளவில், பிரதமர் மோடி, மற்ற முதலமைச்சர்கள் சாதிக்கமுடியாததை நாம் சாதித்துகொண்டிருப்பது தான் அவருடைய வயிற்றெரிச்சல்.
திராவிட மாடல் 2.0-வில் இன்னும் அதிகமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம். இந்திய நாடே தமிழ்நாட்டை திரும்பி பார்க்கும் அளவிற்கு நிச்சயம் செயல்படுவோம். அதை நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பார்த்துகொண்டிருப்பீர்கள்.