
தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள், சாதி கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கதிரவன் என்பவர் வழக்கு தொடரர்ந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அரசின் இடத்தை தங்கள் அரசியல் லாபத்துக்காக கட்சிகள் பயன்படுத்துவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா?’ என கேள்வி எழுப்பியதுடன் மனுவை தள்ளுபடி செய்தது.
சாலை ஓரங்களில் கொடிக்கம்பங்களை அகற்றும் விஷயத்தில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது. அதே சமயம் 6 ஆண்டுகளுக்கு முன்பே கன்னியாகுமரி மாவட்டத்தில் கொடிகம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. இப்போது சாலை ஓரங்களில் உள்ள அரசு நிலங்களில் கட்சி கொடிகம்பங்கள் இல்லாத நிலைதான் உள்ளது.
கொடிகம்பங்கள் அமைக்க வேண்டும் என்ற ஆசை உள்ள அரசியல் கட்சிகள் சாலை ஓரங்களில் உள்ள தங்கள் கட்சியினருக்கு சொந்தமான நிலத்திலோ, அல்லது கட்சியினரின் வீட்டுக்கு முன்பு உள்ள பட்டா நிலத்திலோதான் அமைக்கின்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சி முன்னாள் கமிஷனர் சரவணகுமார் மற்றும் முன்னாள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர்தான் 2019-ம் ஆண்டே கொடிகம்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கு அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்கினர். அதைத்தொடர்ந்தே சாலை ஓரங்களில் கொடிகம்பங்கள் முற்றிலும் அகற்றப்பட்டன.
இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க தலைவர் ஜாண் விக்டர்தாஸ் கூறுகையில், “தமிழ்நாட்டில் சாலை ஓரங்களில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என கோர்ட் வழிகாட்டி வருகிறது. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சியினர் கருத்து கூறி வருகின்றனர். அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிகம்பங்களும் அகற்றப்படுவிட்டன.
நாகர்கோவில் மாகராட்சி கமிஷனராக சரவணகுமார் இருந்தபோது 2019-ம் ஆண்டு நகரில் இருந்த அனைத்து கொடிகம்பங்களையும் அகற்ற நடவடிக்கை எடுத்தார். அதுபோன்று மக்களுக்கு இடையூறாக பிளக்ஸ் போர்டுகளும் வைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அன்றைய கலெக்டர் பிரசாந்த் வடநேரே கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டார். எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் அதிகாரிகள் பேசி புரியவைத்தனர்.
அரசியல் கட்சியினரும் மக்கள் நலனுக்காக அதை ஏற்றுக்கொண்டனர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சியினர் சாலை ஓரத்தில் உள்ள தங்களது பட்டா நிலத்தில் கொடிகம்பங்கள் அமைத்து வருகின்றனர்.

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கொடிகம்பங்களை அகற்ற முன்மாதிரியாக செயல்பட்ட அதிகாரிகளை இன்றளவும் குமரி மக்கள் பாராட்டுகிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை முன் மாதிரியாகக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள கொடிகம்பங்கள் அகற்றப்பட்டால் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் இருக்கும்” என்றார்.