• August 9, 2025
  • NewsEditor
  • 0

சவுதி அரேபியாவில் மரண தண்டனை அதிக அளவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருளை பகிர்தல் போன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் எந்த வித கேள்வியும் கேட்காமல் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

உலகிலேயே அதிக அளவில் மரண தண்டனையை நிறைவேற்றும் நாடாக இருக்கும் சவுதி அரேபியா கடந்த 6 மாதத்தில் மட்டும் 180 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றி இருக்கிறது. இது குறித்து உலக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந்தனர். இதையடுத்து மரண தண்டனைகள் கட்டுப்படுத்தப்படும் என்று சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்து இருந்தார்.

ஆனால் அவர் அப்படி உத்தரவாதம் கொடுத்த பிறகும் மரண தண்டனைகள் குறையவில்லை. மரண தண்டையில் அதிக அளவில் உயிரிழப்பது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆகும். இவர்கள் பெரும்பாலும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அல்லது போதைப்பொருள் கடத்தியது, வைத்திருந்தது போன்ற காரணங்களுக்காக இந்த மரண தண்டனை வழங்கப்படுகிறது. தசிர் என்ற இஸ்லாமிய சட்டக் கோட்பாட்டின் கீழ், சவூதி அரேபிய நீதிமன்றங்கள் மரண தண்டனைகளை அதிக அளவில் தொடர்ந்து வழங்குகின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மொத்தம் 1816 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் போதைப்பொருள் தொடர்பாக 597 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டில் மட்டும் 345 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இது 30 ஆண்டுகளில் அதிக பட்ச எண்ணிக்கையாகும். இதே போன்று நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் வரை 180 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இஸ்லாமிய சட்டமான தாஜிரில் குற்றங்களுக்கு என்ன தண்டனை என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. நாட்டில் உள்ள பிற சட்டங்களிலும் இது தொடர்பாக தெளிவான வரையறைகள் இல்லை. எனவே நீதிபதிகள் கொடுப்பதுதான் தண்டனையாக இருக்கிறது. தாஜிர் சட்டத்தில் நீதிபதிகளுக்கே முழு அதிகாரம் இருக்கிறது.

சவுதி அரேபியா

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறிக்கொண்டு எந்தவித விசாரணையும் இல்லாமல் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனை அந்நாடு நியாயப்படுத்தி இருக்கிறது. 2023ம் ஆண்டு அந்நாட்டு இளவரசர் போதைப்பொருளுக்கு எதிரான போரை அறிவித்தார். அதனை தொடர்ந்து ஒட்டுமொத்தமாக கைது செய்து மரண தண்டனை கொடுப்பது அதிகரித்து இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *